'அமைதி பேச்சு நடத்த புடின் ஆர்வமாக உள்ளார் என்பதற்கு ஆதாரம் இல்லை'
'அமைதி பேச்சு நடத்த புடின் ஆர்வமாக உள்ளார் என்பதற்கு ஆதாரம் இல்லை'
ADDED : செப் 20, 2025 06:15 AM

இஸ்தான்புல் : 'உக்ரைனில் அமைதிப் பேச்சு நடத்த உண்மையிலேயே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆர்வம் கொண்டுள்ளார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பான 'எம்.ஐ., - 6'ன் தலைவர் ரிச்சர்ட் மூர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கும், ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும் இடையேயான போர் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் நடந்து வருகிறது. இப்போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புடின் ஆர்வம் காட்டவில்லை என பிரிட்டன் உளவுத் துறை அமைப்பான 'எம்.ஐ., - 6' ன் தலைவர் ரிச்சர்ட் மூர் கூறியுள்ளார்.
தன் ஐந்து ஆண்டு கால பதவியை இம்மாத இறுதியுடன் நிறைவு செய்ய உள்ள அவர், மேற்காசிய நாடான துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
ரஷ்ய அதிபர் புடின் நம்மை ஏமாற்றி வருகிறார். அவர் தன்னுடைய ஏகாதிபத்திய விருப்பத்தை, தனக்குள்ள அனைத்து வழிகளிலும் திணிக்க முயல்கிறார்.
ஆனால், உக்ரைனுக்கு எதிரான போரில், அவரால் வெற்றி பெற முடியாது. சுலபமாக வெல்ல முடியும் என எண்ணி, உக்ரைன் வீரர்களை அவர் குறைத்து மதிப்பிட்டு விட்டார். ரஷ்யாவின் வெற்றி தவிர்க்க முடியாதது என உலகை நம்ப வைக்க முயல்கிறார். தன்னுடைய தனிப்பட்ட வரலாறுக்காக, தன் நாட்டின் எதிர்காலத்தை புடின் அடகு வைக்கிறார்.
அவர் உலக மக்களிடம் மட்டுமின்றி, தன் நாட்டு மக்களிடமும் பொய் சொல்கிறார். ஒருவேளை தனக்குத்தானே கூட அவர் பொய் சொல்லலாம்.
போரை நிறுத்த அமைதி பேச்சு நடத்துவதற்கு உண்மையிலேயே அவர் ஆர்வம் காட்டுகிறார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.