தியாகராஜன் 'கோட்டைக்குள்' புகுந்த மூர்த்தி: 'மாநகராட்சி அரசியலால்' அமைச்சர்களுக்குள் கலகல...
தியாகராஜன் 'கோட்டைக்குள்' புகுந்த மூர்த்தி: 'மாநகராட்சி அரசியலால்' அமைச்சர்களுக்குள் கலகல...
ADDED : செப் 03, 2025 08:02 AM

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியாக, அமைச்சர் தியாகராஜனின் சொந்த தொகுதியில் (மத்திய தொகுதி) 'எழில்கூடல்' என்ற பெயரில் மெகா துாய்மை பணி திட்டத்தை துவக்கி வைத்து 'கெத்து' காட்டினார் அமைச்சர் மூர்த்தி. பதறிப்போன அமைச்சர் தியாகராஜன் நேற்று தனது தொகுதிக்குள் அவசரமாக சென்று மக்கள் சந்திப்பு முகாம் நடத்தி மூர்த்திக்கு 'செக்' வைத்தார்.
மதுரை மாவட்டத்தில் 10 சட்டபை தொகுதிகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் மத்தி, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய தொகுதிகள் நகர் தி.மு.க., செயலாளர் தளபதி கட்டுப்பாட்டிலும், அமைச்சர் மூர்த்தியின் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில் கிழக்கு, சோழவந்தான், மேலுார் தொகுதிகளும், அவரது விசுவாசியான மணிமாறனின் தெற்கு மாவட்ட தி.மு.க.,வில் திருமங்கலம், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம் தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன. இதற்கிடையே நகர்ப் பகுதியில் இருந்த மேற்கு சட்டசபை தொகுதி அமைச்சர் மூர்த்திக்கு உட்பட்ட வடக்கு மாவட்ட எல்லைக்குள் மாற்றப்பட்டது.
இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் நடந்த ரூ.பல கோடி சொத்துவரி முறைகேடு எதிரொலியாக ஆளுங்கட்சி மண்டல தலைவர்கள் பதவியை இழந்தனர். மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். தற்போது தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்நிலையில் மேயர் இந்திராணியை மாற்றி புதிய மேயரை கொண்டுவர அமைச்சர்கள் மூர்த்தி -தியாகராஜனுக்கு இடையே பனிப்போர் நடக்கிறது. இவ்விஷயத்தில் நகர் செயலாளர் தளபதி, அமைச்சர் தியாகராஜன் பக்கம் சாய்ந்துள்ளார்.
இரு தரப்பிலும் தலா ஒருவர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே அமைச்சர் மூர்த்தி, 'வரும் சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளிலும் தி.மு.க.,வை வெற்றி பெறச் செய்கிறேன். அதற்காக, என் ஆதரவாளருக்கு மேயர் பதவியை தாருங்கள்' என தலைமையிடம் தெரிவித்துள்ளார். இதற்கு தலைமையும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டது. ஆனாலும் மேயர் மாற்றம் தள்ளிப்போகிறது.
மூர்த்தி கட்டுப்பாட்டில் இதற்கிடையே மாநகராட்சியை துாய்மைப்படுத்துவதாக கூறி தியாகராஜனின் சொந்த தொகுதியில் 'எழில்கூடல்' திட்டத்தை அமைச்சர் மூர்த்தி துவக்கி 2500க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், கட்சியினருக்கு அசைவ விருந்து வைத்துள்ளார்.
இரவு முழுவதும் அவரது கண்காணிப்பில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் துாய்மை பணி நடந்தது, மக்களிடம் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் மாநகராட்சியை மூர்த்தி தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டார் என கட்சியினர் கூறினர். இத்தகவல் அறிந்த தியாகராஜனும் இரண்டாவது நாளில் அவரது மத்திய தொகுதிக்குள் சென்று மக்கள் சந்திப்பு நடத்தி மூர்த்திக்கு பதிலடி கொடுத்தார்.
நிர்வாகிகள் கூறுவது என்ன?
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: மூர்த்தியின் இலக்கு எப்படியாவது மாநகராட்சி பகுதியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பது தான். அதற்காக அவர் மேற்கொள்ளும் கட்சிப்பணிகளை தலைமை வரவேற்கிறது. அதேநேரம் அவரை மாநகராட்சிக்குள் வரவிடக்கூடாது என தியாகராஜன், தளபதி தரப்பு முட்டுக்கட்டை போடுகிறது.
ஆனால் நகர் பகுதியில் உள்ள தி.மு.க., வட்டம், பகுதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பெரும்பாலும் மூர்த்தி கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டனர். தலைமையும் 10 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற 'அசைன்மென்ட்'டையும் மூர்த்திக்கு கொடுத்துள்ளது.
தியாகராஜனின் மத்திய தொகுதி தவிர்த்து அனைத்து தொகுதிகளும் விரைவில் மூர்த்தி வசம் வரும் வாய்ப்புள்ளது.
அதற்கான அறிகுறி தான் தியாகராஜனின் கோட்டையான மத்திய தொகுதியில் துாய்மைப் பணித் திட்டத்தை மூர்த்தி நடத்திக்காட்டியுள்ளது. விரைவில் மேயர் மாற்றமும் இருக்கும் என்றனர்.