திட்டக்குடி தி.மு.க., சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமரச முயற்சியில் அமைச்சர் சமாதன முயற்சியில் அமைச்சர் கணேசன்
திட்டக்குடி தி.மு.க., சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமரச முயற்சியில் அமைச்சர் சமாதன முயற்சியில் அமைச்சர் கணேசன்
ADDED : செப் 23, 2025 07:56 AM

திட்டக்குடி : திட்டக்குடி நகராட்சியில் தி.மு.க., சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, கட்சி பாகுபாடின்றி கவுன்சிலர்கள் மனு அளித்துள்ளனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி நகராட்சி சேர்மனாக தி.மு.க.,வை சேர்ந்த வெண்ணிலா மற்றும் துணை சேர்மனாக தி.மு.க., நகர செயலர் பரமகுரு உள்ளனர். இங்கு, தி.மு.க., மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் 19 பேர், அ.தி.மு.க., வினர் ஐந்து பேர் என, மொத்தம் 24 கவுன்சிலர்கள் உள்ளனர்.
கடந்தாண்டு ஜூலை மாத இறுதியில், வார்டுகளில் முறையாக திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை, நகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கட்சி பாகுபாடின்றி கவுன்சிலர்கள், சேர்மன் மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
மேலும், சேர்மன் மீது அதிருப்தியில் இருந்த கவுன்சிலர்கள், அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர மனு அளித்தனர். ஆனால், கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்ட செயலரும், அமைச்சருமான கணேசன் தலையிட்டு, சமாதானம் செய்தார். ஆனாலும் சேர்மன் நடவடிக்கையில் திருப்தியில்லை என அவர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 11:00 மணிக்கு திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் தி.மு.க.,- அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 17 பேர், சேர்மனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின், நகராட்சி பொறியாளர் ராமரிடம், சேர்மன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது உட்பட 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு அளித்தனர். இதையடுத்து, கவுன்சிலர்களை சமாதானப்படுத்தும் பணியில் அமைச்சர் கணேசன் மீண்டும் களம் இறங்கி உள்ளார்.