நடிகர் விஜய் பயணத்தால் பால் வினியோகம் தடுப்பு; பால் முகவர்கள் கண்டனம்
நடிகர் விஜய் பயணத்தால் பால் வினியோகம் தடுப்பு; பால் முகவர்கள் கண்டனம்
ADDED : செப் 28, 2025 07:21 AM

சென்னை: 'நடிகர் விஜய் சுற்றுப் பயணத்தையொட்டி, பால் வினியோகம் செய்ய விடாமல் தடுத்த போக்குவரத்து போலீசார் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
சங்கத் தலைமை வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல், கரூர் மாவட்டங்களில், த.வெ.க., தலைவர் விஜய், நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவரது வருகையை ஒட்டி, நாமக்கல் - சேலம் சாலையில், தடுப்புகள் அமைத்து, வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு, பால் வினியோகம் செய்யச் சென்ற, பால் முகவரும், சங்கத்தின் மாவட்டத் தலைவருமான அருண் என்பவரை, பால் வினியோகம் செய்ய விடாமல், போக்குவரத்து போலீசார் தடுத்துள்ளனர்.
இதை 'வீடியோ' எடுத்ததற்கு, சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார், அவரை மிரட்டி, மொபைல் போனை பறித்து, அவர் எடுத்த வீடியோவை அழித்து உள்ளனர்.
இயற்கை பேரிடர், கடையடைப்பு போராட்டம் போன்ற காலங்களில், குடிநீர், பால், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, பொதுமக்களுக்கு வினியோகிக்க, காவல் துறையினர் பாதுகாப்பு வழங்குவர். ஆனால், ஒரு அரசியல் கட்சி தலைவர் வருகைக்காக, அடக்கு முறையை, போலீசார் கையாள்வது கண்டிக்கத்தக்கது.
நடிகர் விஜய் மட்டுமல்ல, எந்த ஒரு தலைவரின் வருகைக்காகவும், பால் வினியோகத்தில் ஈடுபடுவோரை தடுப்பதை ஏற்க முடியாது.
எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் மீது, தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.