207 அரசு பள்ளிகளை மூடி விட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவா? பா.ம.க., அன்புமணி கண்டனம்
207 அரசு பள்ளிகளை மூடி விட்டு கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழாவா? பா.ம.க., அன்புமணி கண்டனம்
ADDED : செப் 28, 2025 07:14 AM

திண்டுக்கல்: ''ஜாதிவாரி கணக்கெடுப்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார்,'' என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
திண்டுக்கல்லில் அவர் அளித்த பேட்டி:
மாநில அரசு நடத்த வேண்டிய ஜாதி வாரி கணக்கெடுப்பிற்கு தடை எதுவும் கிடையாது என கர்நாடகா உயர் நீதிமன்றம் கூறிய பின்னும், மாநில அரசிற்கு அதிகாரம் இல்லை, மத்திய அரசு தான் எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்லி வருகிறார்.
கர்நாடகா, பீஹார், தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் நடத்த முடியாது என்று பொய் சொல்லும் முதல்வரை இப்போதுதான் பார்க்கிறோம்.
கடந்த 1931ல் எடுத்த ஜாதிவாரி கணக்கெடுப்பின் படி தான், 90 ஆண்டுகளாக ஓட்டிக் கொண்டிருக்கிறோம். ஜாதிவாரி கணக்கெடுப்பு என சொல்வதற்கு தயக்கமாக இருந்தால், சமூக நீதி கணக்கெடுப்பு என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள்.
'கல்வியில் சிறந்தது தமிழ்நாடு' என, சினிமாக்காரர்களை அழைத்து வந்து விழா நடத்தி உள்ளனர். கேளிக்கைக்காக நடத்தப்பட்ட அந்த விழாவுக்கு, ஏராளமான தொகை செலவு செய்யப்பட்டிருக்கிறது.
மக்களிடம் இருந்து சுரண்டி வசூலிக்கப்படும் வரிப்பணம், இப்படி தெண்டமாக செலவு செய்யப்படுகிறது. மொத்தத்தில் அரசு பணம் வீண்.
தமிழகத்தில், கல்வி பாதாளத்தில் இருக்கிறது. மொத்தம் உள்ள 37,500 அரசு பள்ளிகளில் 52 லட்சம் மாணவர்களும், 12,500 தனியார் பள்ளிகளில் 65 லட்சம் மாணவர்களும் படிக்கின்றனர்.
இதுவே, தமிழக கல்வி பாதாளத்தில் இருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம். அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு சதவீதம் அளவுக்கே இருக்கும் தனியார் பள்ளிகளில் அதிகமானோர் படிக்கின்றனர்.
இதுவரை, 207 அரசு பள்ளிக்கூடத்தை மூடி விட்டனர்; 4,000 தொடக்கப்பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளனர். ஒரு லட்சம் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கிடையாது. இது, கல்வியில் சிறந்த தமிழ்நாடா?
இவ்வாறு அவர் கூறினார்.