ஒரு டிரில்லியன் டாலர் இலக்குடன் அரசு முன்னேறி வருகிறது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ஒரு டிரில்லியன் டாலர் இலக்குடன் அரசு முன்னேறி வருகிறது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
ADDED : செப் 03, 2025 02:37 PM

சென்னை: ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஜெர்மனியிலிருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு விமானத்தில் பறந்து செல்லும் நேரத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். திமுக ஆட்சியில் தமிழகம் இரட்டை இலக்கத்திலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகமுள்ள மாநிலமாகவும், வேலைவாய்ப்புகளை 15% வழங்கும் இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது என்கிற மத்திய அரசின் புள்ளிவிவரங்களை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
ஒரு டிரில்லியன் டாலர்
ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் பெரும் பங்களிப்பைச் செலுத்தி வரும் நிலையில், ஜெர்மனி நாட்டில் உள்ள இந்திய அதிகாரிகளின் வரவேற்பு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது.அந்த மகிழ்ச்சியுடன் டசெல்டோர்ப் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது ஓர் இன்ப அதிர்ச்சி.
அந்தப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நின்று வரவேற்பளித்தனர். சென்னையில் இருந்தாலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தாலும், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கு வந்தாலும் காலை நேரத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்வதை உங்களில் ஒருவனான நான் வழக்கமாக வைத்திருக்கிறேன். எந்த நாட்டில், எந்த நகரில் இருந்தாலும் உங்களில் ஒருவனான என் மனது தமிழகத்தை தான் சுற்றிச் சுழல்கிறது.
விமர்சனங்கள்
வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழகத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழகத்தில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் ஒருவனான எனக்கு ஏற்பட்டது.
காலையில் நடந்த நிறுவனங்களுடனான சந்திப்பு, மாலையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
வளர்ச்சி
திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள தமிழர்களின் வளர்ச்சிக்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கிறோம். லண்டனிலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு. அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் லண்டன் தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.