மோசடி செய்து பாமக முகவரி மாற்றம்: அன்புமணி மீது ஜிகே மணி குற்றச்சாட்டு
மோசடி செய்து பாமக முகவரி மாற்றம்: அன்புமணி மீது ஜிகே மணி குற்றச்சாட்டு
ADDED : செப் 16, 2025 06:03 PM

சென்னை: கபட நாடகத்தால் பாமகவின் தலைமை அலுவலக முகவரி மாற்றப்பட்டுள்ளது. இது மோசடி. ஏமாற்றுவேலை. கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் தான்,'' என பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. இருவரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர், பாமக பொதுக்குழுவை கூட்டி அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ராமதாஸ் தரப்பு அதனை ஏற்கவில்லை. ராமதாஸ் தான் தலைவர் என அவர் கூட்டிய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவதாக, ராமதாஸ் அறிவித்தார்.
நிருபர்களை சந்தித்த பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கூறியதாவது: தேர்தல் கமிஷனின் கடிதத்தை காட்டி பரபரப்பாக செய்தியாக, மக்களை நம்ப வைக்கும் செய்தியாக திசைதிருப்பும் செயல் நேற்று நடந்தது. மக்களை நம்ப வைக்க திட்டமிட்டு நடந்த மோசடி. கடந்த ஜூலை ல் தேர்தல் கமிஷன் ஒரு கடிதம் அனுப்பியது. அதில் தமிழகம், புதுச்சேரிக்கு பாமகவுக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், ' தலைவர், பாமக, 10 திலக் தெரு, திநகர் சென்னை 17 ' என்ற முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி ராமதாசுக்கும், பாமகவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாமகக்கு நிரந்தரமான முகவரி, ' தலைமை அலுவலகம், 63, நாட்டு முத்து நாயக்கன் தெரு, தேனாம்பேட்டை சென்னை' ஆகும். இது தான் பாமகவின் நிரந்தர முகவரி ஆகும்.ஆனால், எப்படியோ திசை திருப்பி, சூழ்ச்சி, கபட நாடகத்தால் முகவரி மாற்றப்பட்டுள்ளது. மோசடி செய்து முகவரி மாற்றப்பட்டுள்ளது. கடிதம் பாமக தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முகவரி தேனாம்பேட்டை இல்லாமல், திநகருக்கு போயுள்ளது. இது ஏமாற்று வேலை.
அதற்கு முன்னர் செப்., 9 ல் தேர்தல் கமிஷன் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. அதில் மாமல்லபுரத்தில் நடந்த பாமக பொதுக்குழுவில் தேர்வு செய்த நிர்வாகிகள் பட்டியலை பதிவு செய்து கொள்கிறோம் எனக்கூறியுள்ளது. இதில் யார் பெயரும் இல்லை.
2022 ல் பாமக தலைவரான அன்புமணியின் பதவிக்காலம் 2025 ல் நிறைவு பெற்றது. தற்போது அவர் பதவியில் இல்லை. தலைவர் பதவியில் இல்லாதவர் மாமல்லபுரத்தில் எப்படி பொதுக்குழு கூட்ட முடியும். பாமக விதியின்படி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் இல்லாமல் நிர்வாகக்குழு, பொதுக்குழு, செயற்குழு செயல்படக்கூடாது. விதியை மீறி எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும். அவர் பொறுப்பில் இல்லை.
கடந்த மே மாதம் நடந்த பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கு செயற்குழு, பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. கட்சியின் நிறுவனர், தலைவர் ராமதாஸ்தான். இவ்வாறு அவர் கூறினார்.