கோவை தி.மு.க., - மா.செ.,வாக செந்தில் பாலாஜி ஆதரவாளர் நியமனம்
கோவை தி.மு.க., - மா.செ.,வாக செந்தில் பாலாஜி ஆதரவாளர் நியமனம்
ADDED : செப் 27, 2025 08:33 AM

கோவை மாநகர தி.மு.க., மாவட்டச் செயலராக இருந்த கார்த்திக் மாற்றப்பட்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளரான செந்தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், கோவை மாவட்டத்தில், 10 தொகுதிகளில், தி.மு.க., தோல்வி அடைந்தது. அப்போதைய ஆளும்கட்சி அமைச்சருடன் திரைமறைவில் கோவை மாவட்ட தி.மு.க., புள்ளிகள் சிலர் தொடர்பு வைத்திருந்ததே, தி.மு.க., தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது.
இதையடுத்து, கோவை மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார்.
அதன்பின், கட்சியில் சீரமைப்பு நடவடிக்கைகள் துவங்கின. இதில், கோவை மாநகர மாவட்டச்செயலராக இருந்த கார்த்திக்கிற்கும், செந்தில் பாலாஜிக்கும் ஆகாமல் போனது.
கட்சி நிகழ்ச்சிகளில், செந்தில் பாலாஜி ஆதரவாளர்களை புறக்கணித்தார். அதேபோல், மாணவர் அணி மாநில செயலர் ராஜிவ் காந்திக்கும், கோவை மாநகர் மாவட்டத்தில் நடக்கிற கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதில்லை.
இதற்கிடையில், 'ஓரணியில் தமிழகம்' இயக்கத்தின் வாயிலாக, தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையில், கார்த்திக் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த தேர்தலில் இழந்த, 10 தொகுதிகளை, வரும் சட்டசபை தேர்தலில் மீட்க வேண்டும் என்றால், கார்த்திக்கை மாற்ற வேண்டும் என, கட்சி தலைமையிடம், மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, மாவட்டச் செயலர் பதவியில் இருந்து, கார்த்திக் மாற்றப்பட்டு, செந்தில் பாலாஜி ஆதரவாளர் செந்தமிழ்செல்வன் நியமிக்கப் பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -