வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து
வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ரத்து
ADDED : மே 12, 2025 07:12 AM

சென்னை : 'ஜாக்டோ - ஜியோ' வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற, ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2016, 2017, 2019ம் ஆண்டுகளில், வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது.
அதில், பங்கேற்ற ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டது; பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். பல்வேறு குற்றவியல் வழக்குகளும் பதியப்பட்டன. இதனால், பதவி உயர்வு உள்ளிட்ட பலன்களை பெறுவதில், அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. தற்போது, ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்ட உத்தரவு:
கடந்த, 2019 ஜாக்டோ -- ஜியோ போராட்டத்தின் போது, ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில், முதல் தகவல் அறிக்கை பெறப்பட்டு, நிலுவை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த, 2016, 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்ட நாட்கள், பணி நாட்களாக கருதப்படும். தற்காலிக பணி நீக்க காலமும், பணிக்காலமாக ஏற்கப்படும்.
வேலைநிறுத்தம் காரணமாக, ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுகின்றன.
பதவி உயர்வு பெறுவதில், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்கள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தின் போது பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை, மீண்டும் பழைய இடத்தில் பணி அமர்த்த வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வின்போது, அவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கும்படி, இணை இயக்குநர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.






