உலக அமைதிக்காக என்னை போன்று பாடுபட்டவர்கள் யாரும் கிடையாது: டிரம்ப் தம்பட்டம்
உலக அமைதிக்காக என்னை போன்று பாடுபட்டவர்கள் யாரும் கிடையாது: டிரம்ப் தம்பட்டம்
ADDED : செப் 20, 2025 07:54 AM

வாஷிங்டன்; உலக நாடுகள் இடையே அமைதி நிலவ வேண்டும் என்பதில் என்னை போன்று பாடுபட்டவர்கள் யாரும் கிடையாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருக்கிறார்.
ஐநா சபை கூட்டத்தொடரில் உயர்மட்ட பொது விவாதம் செப்.23ம் தேதி முதல் செப்.29ம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செப்.23ம் தேதி உரையாற்றுகிறார்.
இந் நிலையில், வெள்ளை மாளிகையில் அவர் நிருபர்களிடம் பேசினார். அப்போது ஐநா சபைக் கூட்டத்தில கலந்து கொள்ளும் உங்களின் இலக்கு என்ன என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டிரம்ப் பதில் அளித்ததாவது;
உலக அமைதி தான் எனது இலக்கு. உலக அமைதிக்காக நான் செய்ததை விட யாரும் சிறப்பாக செய்தது இல்லை. இந்த 8 மாதங்களில் பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளேன். 7 முக்கிய பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளேன்.
ஈரானில் ஒரு பெரிய அணுசக்தி பேரழிவு பிரச்னையும் இதில் அடங்கும். பி 2 போர் விமானங்கள் மூலம் அணுசக்தி நிலையங்களை முற்றிலும் அழித்தோம்.ஒவ்வொரு குண்டும் இலக்கை சரியாக குறி வைத்து அழித்தது. (ஈரான், இஸ்ரேல் மோதலின் போது அமெரிக்கா தலையிட்டு, ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது பி 2 வகை போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசியதை குறிப்பிடுகிறார்).
நீர்மூழ்கி கப்பலில் இருந்து 30 ஏவுகணைகளை வீசினோம். அதை நான் இதில் சேர்க்கவில்லை. அது ஒரு பேரழிவு தரும் போரை நிறுத்தியது. அதற்கும் மேல் சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா, உக்ரைன் போரை தீர்த்து வைக்க கடினமாக போராடி வருகிறோம்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நானும் இதை பற்றி பேசி இருக்கிறோம். போர் முடிவடைய வேண்டும் என்று அவரும் விரும்புகிறார் என்று நான் நம்புகிறேன். இந்த விஷயத்தில் அவர் எங்களுடன் இணைந்து, எங்களுக்கு உதவுவார் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.