/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாலியல் பாதிப்பை வெளிப்படையாக சொல்ல பிறந்தது தைரியம்! போக்சோ வழக்கு அதிகரிக்க இதுவும் காரணம்
/
பாலியல் பாதிப்பை வெளிப்படையாக சொல்ல பிறந்தது தைரியம்! போக்சோ வழக்கு அதிகரிக்க இதுவும் காரணம்
பாலியல் பாதிப்பை வெளிப்படையாக சொல்ல பிறந்தது தைரியம்! போக்சோ வழக்கு அதிகரிக்க இதுவும் காரணம்
பாலியல் பாதிப்பை வெளிப்படையாக சொல்ல பிறந்தது தைரியம்! போக்சோ வழக்கு அதிகரிக்க இதுவும் காரணம்
ADDED : செப் 02, 2025 09:28 PM

கோவை; பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரிடம் போலீசார் ஏற்படுத்தி வரும் விழிப்புணர்வால், பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களை, தைரியமாக கொடுக்க முன்வருகின்றனர். இதன் காரணமாக, சில ஆண்டுகளாக போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகும், போக்சோ வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் சிக்குவோரை தண்டிக்க, போக்சோ சட்டம் உள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுப்போரை இச்சட்டத்தில் தண்டிக்க முடியும்.
பாதிப்புக்கு உள்ளாகும் சிறுமியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதால், புகார் தெரிவிக்க இதற்கு முன் பெற்றோர் அச்சப்பட்டனர். பெரும்பாலான குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட சிறுமியரின் உறவினராக, தெரிந்தவராக இருப்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, குடும்பத்தினரும் தயக்கம் காட்டினர்.
இப்போது, சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனால் பலரும் தைரியமாக வழக்கு கொடுக்க முன்வருவதால், போக்சோ வழக்குகள் எண்ணிக்கை, கடந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில், 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
நம்பிக்கை ஏற்படுத்தணும் போலீசார் கூறுகையில், 'பெரும்பாலும், தாய், தந்தையை பிரிந்து வாழும் குடும்பங்களில் உள்ள குழந்தைகளில் பலர், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். குழந்தைகளுடன் பெற்றோர் மனம் விட்டு பேச வேண்டும். அவர்களுக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டாலும், பெற்றோரிடம் தெரிவிக்கும் வகையில், 'நான் உனக்கு இருக்கிறேன்' என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் நடந்த நிகழ்வுகள், அவர்களது தினசரி அனுபவங்களை கேட்டறிய வேண்டும். இதன் வாயிலாக, அவர்களிடம் ஏற்படும் சிறு மாற்றத்தையும் கண்டறியலாம்' என்றனர்.
பாலியல் குற்றம் நடந்தபின், வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது ஒருபுறம் இருந்தாலும், குற்றம் நடைபெறாத அளவுக்கு மக்களிடமும், சிறுவர் - சிறுமியரிடமும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தர வேண்டியதும் முக்கியம்.