/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
சச்சின் நெஞ்சம் தகர்ந்த தருணம்... *ஈட்டி எறிதலில் நழுவிய பதக்கம்
/
சச்சின் நெஞ்சம் தகர்ந்த தருணம்... *ஈட்டி எறிதலில் நழுவிய பதக்கம்
சச்சின் நெஞ்சம் தகர்ந்த தருணம்... *ஈட்டி எறிதலில் நழுவிய பதக்கம்
சச்சின் நெஞ்சம் தகர்ந்த தருணம்... *ஈட்டி எறிதலில் நழுவிய பதக்கம்
ADDED : செப் 19, 2025 11:25 PM

டோக்கியோ: ''உலக தடகள சாம்பியன்ஷிப் பதக்கத்தை நழுவவிட்டது வேதனை அளித்தது,'' என சச்சின் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், உலக தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பைனல் நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் சச்சின் யாதவ் 25, முதல் வாய்ப்பில் அதிகபட்சம் 86.27 மீ., துாரம் எறிந்தார்.
ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற, நடப்பு உலக சாம்பியன் நீரஜ் சோப்ரா (84.03), டைமண்ட் லீக் சாம்பியன் ஜூலியன் வெபரை (86.11, ஜெர்மனி) பின் தள்ளினார். முடிவில், 40 செ.மீ., வித்தியாசத்தில் வெண்கல பதக்கத்தை நழுவவிட்ட சச்சின், 4வது இடம் பிடித்தார்.
சச்சின் கூறியது:
முதல் வாய்ப்பின் போது சூழ்நிலை நன்றாக இருந்தது. திட்டமிட்டபடி சிறப்பாக செயல்பட முடிந்தது. எனது ஈட்டி மைதானத்தில் விழுந்த துாரத்தை பார்த்ததும், இம்முறை பதக்கம் உறுதி என்ற நம்பிக்கை அதிகரித்தது. அடுத்தடுத்த வாய்ப்பில் ஏதாவது ஒருமுறை 87.00 மீ., துாரம் எறிந்து விடலாம் என நினைத்தேன்.
ஆனால், உலகின் முன்னணி வீரர்களுக்கு எதிராக களமிறங்கும் போது, இயற்கையாகவே சிறப்பாக செயல்பட வேண்டும். ஆனால், அடுத்த 5 வாய்ப்பில் ஒன்றில் கூட, அதிக துாரம் எறிய முடியாமல் போனது. கடைசியில், உலக சாம்பியன்ஷிப் பதக்கத்தை நழுவவிட்டு விட்டது, வருத்தமாக இருந்தது.
முதுகுவலியால் அவதிப்பட்ட நீரஜ் சோப்ரா முடிந்தவரை சிறப்பாக செயல்பட்டார். முதல் வாய்ப்பு முடிந்ததும், என்னிடம் வந்த நீரஜ் சோப்ரா, 'இம்முறை நாம் இரு பதக்கம் வெல்ல வேண்டும்,' என்றார். ஆனால், 2021, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பின் முதன் முறையாக நீரஜ் சோப்ரா, எவ்வித பதக்கமும் வெல்லாமல் போனது ஏமாற்றமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
42 ஆண்டில்...
உலக தடகள சாம்பியன்ஷிப், 1983 முதல் நடக்கிறது. 42 ஆண்டு வரலாற்றில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா 2 (2023ல் தங்கம், 2022ல் வெள்ளி), நீளம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜார்ஜ் (2023ல் வெண்கலம்) என, இந்தியா 3 பதக்கம் மட்டும் வென்றது.
தற்போது அஞ்சுவுடன் (2005ல் 4வது) இணைந்து, உலக தடகளத்தில் 4வது சிறந்த செயல்பாட்டை பதிவு செய்த இந்தியர் ஆனார் சச்சின் (4வது இடம்).
0.19 வினாடியில்...
ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டம் தகுதிச்சுற்று நேற்று நடந்தது. இரு பிரிவிலும் 'டாப்-8' வீரர்கள் பைனலுக்கு சென்றனர் தகுதிச்சுற்று 2ல் பங்கேற்ற இந்தியாவின் குல்வீர் சிங், 9வது இடம் (13 நிமிடம், 42.34 வினாடி) பிடித்தார். இவர், 0.19 வினாடியில் (நார்வேயின் ஜேக்கப், 13.42.15, 8வது இடம்) பைனல் வாய்ப்பை நழுவவிட்டார்.
அன்னு ராணி ஏமாற்றம்
உலக தடகளத்தின் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னு ராணி (2017, 2019, 2022, 2023, 2025) 5வது முறையாக பங்கேற்றார். தகுதிச்சுற்றில் 55.18 மீ., துாரம் மட்டும் எறிந்த இவர், 29வது இடம் பிடித்தார்.
மீண்டு வருவேன்
டோக்கியோ ஈட்டி எறிதலில் 8வது இடம் பெற்ற நீரஜ் சோப்ரா கூறுகையில்,'' இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட வேண்டுமென நினைத்தேன். கடைசியில் எல்லாம் மாறிப் போனது. இந்த ஏமாற்றம் என்னை வலிமையாக மீண்டு வரச் செய்யும்,'' என்றார்.