/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ராஷ்மிகா-கபில் 'தங்கம்': உலக துப்பாக்கி சுடுதலில்
/
ராஷ்மிகா-கபில் 'தங்கம்': உலக துப்பாக்கி சுடுதலில்
ADDED : செப் 27, 2025 10:51 PM

புதுடில்லி: ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ராஷ்மிகா, கபில் ஜோடி (10 மீ., 'ஏர் பிஸ்டல்') தங்கம் வென்றது.
டில்லியில், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல' / 'ஷாட்கன்') தொடர் நடக்கிறது. இதன் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' கலப்பு அணிகளுக்கான தகுதிச் சுற்றில் இந்தியாவின் ராஷ்மிகா சாகல்-கபில் (582.15 புள்ளி), வன்ஷிகா சவுத்ரி-ஜோனாதன் கவின் ஆண்டனி (578.20) ஜோடிகள் முதலிரண்டு இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறின.
அடுத்து நடந்த பைனலில் அசத்திய ராஷ்மிகா - கபில் ஜோடி 16-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றது. வன்ஷிகா - ஜோனாதன் ஜோடி வெள்ளி வென்றது.
பெண்களுக்கான 'ஸ்கீட்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் மான்சி ரகுவன்ஷி (117 புள்ளி), தில்லான் ரைசா (112.6), அக்ரிமா கன்வார் (111) முறையே 1, 3, 5வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினர். அடுத்து நடந்த பைனலில் தில்லான் ரைசா, 51 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
மான்சி (41) வெண்கலம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை அக்ரிமா (13), 6வது இடம் பிடித்து ஏமாற்றினார். இத்தாலியின் அரியன்னா நெம்பர் (53) தங்கத்தை தட்டிச் சென்றார்.
இதுவரை 3 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என, 11 பதக்கம் கைப்பற்றிய இந்தியா, முதலிடத்தில் நீடிக்கிறது.