/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியா-தென் கொரியா 'டிரா' * ஆசிய ஹாக்கி 'சூப்பர்-4' சுற்றில்...
/
இந்தியா-தென் கொரியா 'டிரா' * ஆசிய ஹாக்கி 'சூப்பர்-4' சுற்றில்...
இந்தியா-தென் கொரியா 'டிரா' * ஆசிய ஹாக்கி 'சூப்பர்-4' சுற்றில்...
இந்தியா-தென் கொரியா 'டிரா' * ஆசிய ஹாக்கி 'சூப்பர்-4' சுற்றில்...
ADDED : செப் 03, 2025 10:56 PM

ராஜ்கிர்: ஆசிய ஹாக்கி 'சூப்பர்-4' சுற்றில் இந்தியா, தென் கொரிய அணிகள் மோதிய போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
பீஹாரில் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் 12வது சீசன் நடக்கிறது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உட்பட 8 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின. 'ஏ' பிரிவில் இந்தியா, சீனா, 'பி' பிரிவில் மலேசியா, நடப்பு சாம்பியன் தென் கொரியா அணிகள் முதல் இரு இடம் பிடித்து 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறின. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முடிவில் 'டாப்-2' இடம் பெறும் அணிகள் பைனலுக்கு முன்னேறலாம்.
மழை தாமதம்
நேற்று 'சூப்பர்-4' போட்டிகள் துவங்கின. உலகத் தரவரிசையில் 7வது இடத்திலுள்ள இந்திய அணி, 14வது இடத்திலுள்ள தென் கொரியாவை சந்தித்தது. மழை காரணமாக போட்டி 50 நிமிடம் தாமதமாக துவங்கியது.
போட்டி துவங்கிய 3, 6, 7 வது நிமிடங்களில் என, துவக்கத்தில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து மூன்று 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தன. ஆனால் இதில் ஒன்றைக் கூட கோலாக மாற்ற முடியவில்லை.
ஹர்திக் ஆறுதல்
போட்டியின் 8 வது நிமிடத்தில் இந்தியாவின் ராஜ் குமாரிடம் இருந்து பந்தை பெற்ற ஹர்திக் சிங், பீல்டு கோல் அடித்து உதவினார். 12வது நிமிடம் இந்திய வீரர்கள் செய்த தவறு காரணமாக, தென் கொரியாவுக்கு 'பெனால்டி ஸ்டிரோக்' கிடைத்தது. எளிதான இந்த வாய்ப்பை வீணாக்காமல் கோலாக மாற்றினார் ஜிஹன் யங்.
அடுத்த 2 வது நிமிடம் தென் கொரியா வீரர் கிம், 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் ஒரு கோல் அடித்தார். இந்திய அணி முதல் பாதியில் 1-2 என பின்தங்கியது.
இரண்டாவது பாதியிலும் இந்திய அணி வீரர்கள் கோல் அடிக்க திணறினர். 41வது நிமிடத்தில் சுக்ஜீத் சிங் அடித்த பந்து, தென் கொரிய கோல் கீப்பர் மீது பட்டுத் திரும்பியது. அடுத்த சில நிமிடத்தில் அபிஷேக் 'ரிவர்ஸ் ஹிட்' முறையில் அடித்த பந்து, கோல் போஸ்ட் மீது பட்டுச் செல்ல, ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
18 முறை
முதல் 46 நிமிடத்தில் தென் கொரியா ஏரியாவுக்குள் 18 முறை நுழைந்த போதும், சரியான 'பினிஷிங்' இல்லாததால், 2வது கோல் அடிக்க முடியாமல் திணறியது இந்தியா.
52வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கொடுத்த பந்தை வாங்கிய மன்தீப் சிங், அப்படியே வலைக்குள் தள்ளி கோலாக மாற்றினார். முடிவில் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
மலேசியா வெற்றி
நேற்று நடந்த மற்றொரு 'சூப்பர்-4' போட்டியில் மலேசியா, சீனா மோதின. இதில் மலேசிய அணிக்கு சோழன் (45 வது நிமிடம்), அனுவார் (47) தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க, 2-0 என வெற்றி பெற்றது.
* 5 முதல் 8 வரையிலான இடத்துக்கான போட்டிகள் நடக்கின்றன. இதில் நேற்று ஜப்பான் அணி 2-0 என சீன தைபேவை வீழ்த்தியது.