/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
இலங்கை வீரர் தந்தை மரணம் * ஆசிய கோப்பையில் சோகம்
/
இலங்கை வீரர் தந்தை மரணம் * ஆசிய கோப்பையில் சோகம்
ADDED : செப் 19, 2025 11:23 PM

அபுதாபி: ஆசிய கோப்பை போட்டியின் போது இலங்கை வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை மரணம் அடைந்தார்.
அபுதாபியில் நேற்று முன் தினம் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இலங்கை அணி, ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, 'சூப்பர்-4' சுற்றுக்கு முன்னேறியது. இதில் இலங்கை இளம் 'ஸ்பின்னர்' வெல்லாலகே 22, வீசிய கடைசி ஓவரில் ஆப்கன் வீரர் நபி 5 சிக்சர் விளாச, 32 ரன் எடுக்கப்பட்டன. 4 ஓவரில் 49 ரன் கொடுத்து 1 விக்கெட் தான் சாய்த்தார். இந்த அதிர்ச்சியில் இருந்த வெல்லாலகேவுக்கு இன்னொரு சோகம் காத்திருந்தது. போட்டி நடந்து கொண்டிருந்த போது இவரது தந்தை சுரங்கா, 52, மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இதை போட்டி முடிந்த பின் அறிந்ததும், களத்திலேயே அழுதார். உடனடியாக கொழும்பு புறப்பட்டார். ஆசிய கோப்பை தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்பாரா என தெரியவில்லை.
இலங்கை அணி தலைமை பயிற்சியாளர் ஜெயசூர்யா கூறுகையில்,''துனித், உங்களது தந்தையும் ஒரு கிரிக்கெட் வீரர் தான். நீங்கள் வலிமையானவர் என்பது தெரியும். இலங்கை அணிக்காக தொடர்ந்து வெற்றி தேடிந்தந்து தந்தைக்கு பெருமை சேர்ப்பீர்கள் என நம்புகிறேன். கடினமான இந்த காலக்கட்டத்தில் உங்களை வழிநடத்த தந்தை போல நான் இருக்கிறேன். ஒட்டுமொத்த தேசமும் உங்களுக்கு ஆதரவாக உள்ளது,''என்றார்.