/
செய்திகள்
/
விளையாட்டு
/
கிரிக்கெட்
/
லோகேஷ் ராகுல் அரைசதம் * இந்திய 'ஏ' அணி பதிலடி
/
லோகேஷ் ராகுல் அரைசதம் * இந்திய 'ஏ' அணி பதிலடி
ADDED : செப் 25, 2025 06:25 PM

லக்னோ: லக்னோ போட்டி ராகுல் அரைசதம் அடிக்க, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 169/2 ரன் எடுத்திருந்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய 'ஏ' அணி, அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் (தலா நான்கு நாள்) போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டி லக்னோவில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய 'ஏ' 420, இந்திய 'ஏ' 194 ரன் எடுத்தன. இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய 'ஏ' அணி இரண்டாவது இன்னிங்சில் 16/3 ரன் எடுத்து, 242 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய 'ஏ' அணி 17 ரன்னில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின், பிலிப்பே, கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி என இருவரும் அரைசதம் அடித்து, அணியை மீட்டனர். பிலிப்பே 50 ரன்னில் அவுட்டானார். மற்றவர்கள் ஏமாற்ற, ஆஸ்திரேலிய 'ஏ' அணி இரண்டாவது இன்னிங்சில் 185 ரன்னில் சுருண்டது.
ராகுல் அரைசதம்
அடுத்து 412 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்தியா 'ஏ'. ஜெகதீசன் (36), லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. ராகுல் அரைசதம் அடித்தார். இவர், 74 ரன் எடுத்த நிலையில், 'பிசியோதெரபிஸ்ட்' உதவியுடன், 'ரிட்டையர்டு ஹர்ட்' முறையில் திரும்பினார். மூன்றாவது நாள் முடிவில் இந்திய 'ஏ' அணி, இரண்டாவது இன்னிங்சில் 169/2 ரன் எடுத்திருந்தது. சாய் சுதர்சன் (44), மானவ் சுதர் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று கடைசி நாளில் கைவசம் 8 விக்கெட் உள்ள நிலையில், இந்தியா 'ஏ' வெற்றிக்கு 243 ரன் தேவைப்படுகின்றன.