எளிதாக வெல்லுமா இந்தியா * இன்று ஆப்கன் டெஸ்ட் துவக்கம்
எளிதாக வெல்லுமா இந்தியா * இன்று ஆப்கன் டெஸ்ட் துவக்கம்
ADDED : ஜூன் 05, 2026 10:59 PM

புதிய சண்டிகர்: இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி இன்று துவங்குகிறது. இதில் இந்திய அணி எளிதாக வெல்லும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறது. பஞ்சாப் மாநிலம் புதிய சண்டிகரில் உள்ள மஹாராஜா யாதவிந்த்ரா சிங் மைதானத்தில் இன்று போட்டி துவங்குகிறது. இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் களமிறங்குகிறது. சமீபத்தில் முடிந்த கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடிய 8 வீரர்கள், 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் அப்படியே டெஸ்ட் போட்டிக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வரா அல்லது அதிரடியான பேட்டிங்கை தொடர்வரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடைசியாக தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இந்திய அணி, சொந்தமண்ணில் 0-2 என தோற்றது. இதனால் இன்றைய டெஸ்டில் இந்திய வீரர்கள் எச்சரிக்கையுடன் செயல்படலாம்.
சுதர்சன் உறுதியா
இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், ராகுல் ஜோடி துவக்கம் தர உள்ளது. மூன்றாவது இடம் சாய் சுதர்சனுக்கு தரப்பட உள்ளதால், தேவ்தத் படிக்கல் காத்திருக்க வேண்டும். அடுத்து கேப்டன் சுப்மன் கில், ரிஷாப் பன்ட் வருவர்.
மூன்றாவது சுழல்
வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா கைகொடுக்க உள்ளனர். சுழற்பந்து வீச்சில் ஜடேஜாவுக்கு 'ரெஸ்ட்' தரப்பட்டுள்ளது. இதனால் குல்தீப்-வாஷிங்டன் ஜோடி சேர்கின்றனர். மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக ஹர்ஷ் துபே அல்லது மானவ் சுதர் அறிமுக வாய்ப்பு பெறலாம்.
ஆப்கன் எப்படி
ஆப்கானிஸ்தான் அணிக்கு ஹஷ்மதுல்லா ஷாகிதி கேப்டனாக களமிறங்குகிறார். மற்றொரு அனுபவ வீரராக ரஹ்மத் ஷா உள்ளார். இவர்கள் இருவரும் 2018ல் இந்திய டெஸ்டில் பங்கேற்றனர். மற்றபடி 'சீனியர்' பவுலர்கள் ரஷித் கான் இல்லாதது பலவீனம்.
இருப்பினும் ரஹ்மானுல்லா குர்பாஸ், விக்கெட் கீப்பர் அப்சர் ஜஜாய், செடிகுல்லா, அஸ்மதுல்லா ஓமர்சாய், ஜியாவுர் ரஹ்மான் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு சவால் தர முயற்சிக்கலாம்.
8 ஆண்டுக்குப் பின்
இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் 2018ல் முதன் முதலில் டெஸ்ட் போட்டியில் மோதின. பெங்களூருவில் நடந்த இப்போட்டியில் இந்தியா 262 ரன்னில் வென்றது.
முதல் இன்னிங்சில் இந்தியா 474 ரன் எடுத்தது. ஆப்கானிஸ்தான் இரு இன்னிங்சில் 109/10 (27.5 ஓவர்), 103/10 (38.4 ஓவர்) ரன்னில் ஆல் அவுட்டாக, இரண்டு நாளில் போட்டி முடிவுக்கு வந்தது. தற்போது 8 ஆண்டுக்குப் பின் இரு அணிகள் மீண்டும் டெஸ்டில் மோதுகின்றன.
191 நாள்
இந்திய அணி கடைசியாக தென் ஆப்ரிக்காவுடன் கவுகாத்தி டெஸ்டில் பங்கேற்றது. தற்போது 191 நாளுக்குப் பின் இன்று, இந்திய அணி மீண்டும் டெஸ்ட் போட்டில் பங்கேற்கிறது.
ஆடுகளம் எப்படி
ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும். வெப்பநிலை, மதியம் 40 டிகிரி செல்சியஸ் வரை செல்லலாம்.
அஷ்வின்-ஜடேஜா இல்லாமல்
இந்திய அணி சொந்தமண்ணில் 16 ஆண்டுக்குப் பின் அஷ்வின் அல்லது ஜடேஜா என யாரும் இல்லாமல், டெஸ்டில் களமிறங்குகிறது. கடைசியாக 2010ல் இவர்கள் அறிமுகம் ஆவதற்கு முன், இந்தியா இதுபோல விளையாடியது.
50வது டெஸ்ட்
இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் இன்று தனது 50வது டெஸ்டில் களமிறங்குகிறார். தோனி (90), சையது கிர்மானிக்குப் (88) பின், 50 வது டெஸ்டில் பங்கேற்கும் மூன்றாவது இந்திய விக்கெட் கீப்பர் என பெருமை பெறவுள்ளார் ரிஷாப்.
