பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடிய பஸ்: அதிர்ஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்
பிரேக் பிடிக்காமல் தாறுமாறாக ஓடிய பஸ்: அதிர்ஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்
UPDATED : ஜூன் 16, 2026 09:32 PM
ADDED : ஜூன் 16, 2026 09:11 PM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தனியார் பஸ்சில் பிரேக் பிடிக்காமல், தாறுமாறாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி நேற்று காலை 8:30 மணியளவில், தனியார் பஸ் புறப்பட்டது. 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட பஸ்சை, டிரைவர் ரஞ்சித், 28, ஓட்டினார். விருத்தாசலம் வயலுார் ரயில்வே மேம்பாலத்தை கடந்தபோது திடீரென பிரேக் பழுதாகியதால், பஸ் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதிர்ச்சியடைந்த டிரைவர், கியரை குறைத்து, வயலுார் பஸ் நிறுத்தத்தில் இருந்த பேரிகார்டுகள் மீது மோதி, அதன் மீது பஸ்சை இயக்கினார். இதனால், பஸ்சின் வேகம் குறைந்த நிலையில், குறிப்பிட்ட துாரம் தாறுமாறாக ஓடி நின்றது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜீ, பஸ்சை முந்தி சென்று, தனது பைக்கை பஸ் முன் நிறுத்த முயன்றபோது, லேசாக காயமடைந்தார்.
தனியார் பஸ் பிரேக் பழுது தகவலறிந்த வயலுார் மக்கள், பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர்கள் பாதரநேரு, செல்வகுமார் ஆகியோர் பேச்சு வாா்த்தை நடத்தினர். அவர்களை சமாதானம் செய்த போலீசார், போக்குவரத்தை சீரமைத்தனர். தனியார் பஸ் பிரேக் பழுதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவர்கள் தப்பினர் வயலுார் பகுதி மாணவர்கள் 10க்கும் மேற்பட்டோர் உளுந்துார்பேட்டை மார்க்கமாக செல்லும் பஸ்சுக்கு காத்திருந்தனர்.
அந்த நேரத்தில் தாறுமாறாக வந்த தனியார் பஸ், அங்கிருந்த பேரிகார்டுகளை உடைத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றது. இதனால், 10 அடி தொலைவில் பஸ்சுக்கு காத்திருந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர்.
