சுற்றுச்சூழல் சவாலுக்கான தீர்வுகள் விஞ்ஞானிகள், அதிகாரிகள் ஆலோசனை
சுற்றுச்சூழல் சவாலுக்கான தீர்வுகள் விஞ்ஞானிகள், அதிகாரிகள் ஆலோசனை
ADDED : மே 20, 2026 04:30 AM

புதுச்சேரி: புதுச்சேரி எதிர்நோக்கி உள்ள சுற்றுச்சூழல் சவால்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த ஆலோசனை கூட்டம் லாஸ்பேட்டைஅப்துல் கலாம் அறிவியல் மையத்தில் நேற்று நடந்தது.
தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் நாக்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
நிறுவனத்தின் இயக்குனர் வெங்கட மோகன், சென்னை நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சிவகுமார், முதன்மை விஞ்ஞானி கார்த்திகேயன் ஆகியோர் புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை செயலர் சுமிதா உடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
லாஸ்பேட்டை அப்துல்கலாம் அறிவியல் மையத்தில் நடந்த கூட்டத்திற்கு, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு குழுமத்தின் அதிகாரிகள், மத்திய சுற்றுசூழல் பொறியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுச்சேரி எதிர்நோக்கி உள்ள சுற்றுச்சூழல் சவால்களும், அதற்கான தீர்வுகளும் தலைப்பில் கலந்துறையாடல் நடந்தது. அதில், காற்றின் தரத்தை மேம்படுத்துதல், தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுத்தல், உணவுக்கூடங்கள் மற்றும் கல்யாணமண்டபத்தில் உருவாகும் திடக்கழிவுகளை எரிபொருளாக மாற்றுதல், நகரத்தின் மையப்பகுதியில் செல்லும் உப்பனாரை பையோ ரெமிடேசன் முறையில் சுத்திகரிப்பத குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை நாளில் புதுச்சேரியின் காற்றின் மாசு அதிகரிப்பதை பற்றியும், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் மையத்தில் தயாரிக்கப்படும் மாசு குறைவான பசுமை பட்டாசுகளை விற்பதற்கான ஸ்டால்களை திறப்பது குறித்தும் விவா திக்கப்பட்டது.
