ADDED : மே 20, 2026 04:29 AM
புதுச்சேரி: புதுச்சேரியின் 16வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், இன்று எம்.எல்.ஏ.,க்களாக பதவியேற்கின்றனர்.
புதுச்சேரியின் 16வது சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 9ம் தேதி நடந்தது. இதன் முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியானது. அதில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தே.ஜ., கூட்டணி 18 தொகுதிகளை கைப்பற்றியது. அதனையொட்டி, என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி முதல்வராகவும், பா.ஜ., நமச்சிவாயம், என்.ஆர்.காங்., மல்லாடிகிருஷ்ணாராவ் அமைச்சர்களாக கடந்த 13ம் தேதி பதவியேற்றனர்.
அதனைத் தொடர்ந்து, புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவி பிரமாணம் செய்து வைப்பதற்காக, தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட அ.தி.மு.க.,வை சேர்ந்த அன்பழகன், நேற்று முன்தினம் பதவியேற்றார். பின்னர் அவர், தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (20ம் தேதி) காலை 9:30 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி இன்று காலை 9:30 மணிக்கு சட்டசபை, தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலைமையில் கூடுகிறது. தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற 25 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
