ஐ.ஆர்.பி.என் போலீஸ்காரரை கத்தியால் வெட்டி கொல்ல முயற்சி: 2 பேர் கைது
ஐ.ஆர்.பி.என் போலீஸ்காரரை கத்தியால் வெட்டி கொல்ல முயற்சி: 2 பேர் கைது
ADDED : ஜூன் 13, 2026 10:02 PM
திருபுவனை: மதகடிப்பட்டு அருகே ஐ.ஆர்.பி.என்., போலீஸ்காரரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள் குப்பம் கிழக்கு மணவெளி வீதியைச் சேர்ந்தவர் சீத்தாபதி மகன் சசிதரன், 33; ஐ.ஆர்.பி.என் போலீஸ். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கலித்தீர்த்தாள்குப்பம் திரவுபதி அம்மன் கோவில் எதிரே உள்ள வாலிபால் மைதானத்தில் இருந்த இரும்பு கம்பங்களை அகற்றுவது தொடர்பாக சசிதரனுக்கும், அதேப்பகுதியை சேர்ந்த மோகேஷ் 20, என்பவரும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு சசிதரன் மதகடிப்பட்டு – திருக்கனுார் செல்லும் சாலை, கலித்தீர்த்தாள் குப்பத்தில் மொபைலில் பேசியபடி நின்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த மோகேஷ் மற்றும் அவரது நண்பரான பி. எஸ். பாளையத்தைச் சேர்ந்த அரவிந்த், 21, ஆகியோர் பைக்கில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சசிதரனை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். தலை, கழுத்து மற்றும் கைகளில் காயமடைந்த சசிதரன் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சசிதரனை மீட்டு கோரிமேடு ஜிப்மரில் அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து மோகேஷ், அரவிந்தை நேற்று கைது செய்தனர்.
