'பீஹாரில் பேசிய கருத்துகளை தமிழகத்தில் பேசுவாரா மோடி?'
'பீஹாரில் பேசிய கருத்துகளை தமிழகத்தில் பேசுவாரா மோடி?'
ADDED : நவ 04, 2025 04:40 AM

தர்மபுரி: ''பீஹாரில் மோடி பேசிய கருத்தை, தமிழகத்தில் வந்து பேச முடியுமா; பேசக்கூடிய தைரியம் தான் இருக்கிறதா,'' என, முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
தர்மபுரி தொகுதி தி.மு.க., - எம்.பி., மணி இல்ல திருமண விழா, தர்மபுரி அருகே ஆட்டுகாரம்பட்டியில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது, அவர் பேசியதாவது:
தமிழக சட்டசபை தேர்தலை அடிப்படையாக வைத்து, வாக்காளர் பட்டியலில், எஸ்.ஐ.ஆர்., என்ற திட்டத்தின் வாயிலாக, சீராய்வு பெயரில் சதிசெயலை செய்ய, தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது.
அதை தடுப்பதற்காக, சென்னையில், அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து பேசி தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். நாம் நடத்திய கூட்டத்துக்கு தமிழக எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மற்றும் ஓரிரு கட்சிகள் பங்கேற்கவில்லை.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முழுமையான திருத்தப்பணி செய்ய நினைப்பதற்கு காரணம், உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம்.
இதைத்தான், பீஹாரில் செய்தனர்; பிற மாநிலங்களிலும் செய்ய முயற்சிக்கின்றனர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், பீஹாரின் தேஜஸ்வி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, இதில் கூட, தன் இரட்டை வேடத்தை காட்டியிருக்கிறார். பா.ஜ.,வுக்கு பயந்து, தேர்தல் ஆணைய நடவடிக்கையை எதிர்க்க பயப்படுகிறார்.
அதே சமயம் கட்சி தொண்டர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுஉள்ளார்.
அவருக்கு, தேர்தல் ஆணைய நடவடிக்கையில், சந்தேகம் இருப்பதையே அந்த அறிக்கை காட்டுகிறது. அவரால் வெளிப்படையாக இதை எதிர்க்க முடியவில்லை.
பா.ஜ., எப்படிப்பட்ட சதிச்செயலை செய்தாலும், தமிழகத்தில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. தமிழகத்தை சுட்டிக்காட்டி பீஹாரில் வெறுப்பு கருத்துகளை பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
ஓட்டு அரசியலுக்காக நாடகம் நடத்தியிருக்கிறார். அங்கு, அவர் பேசிய அதே கருத்துகளை தமிழகத்தில் வந்து பேச முடியுமா; அல்லது பேசக்கூடிய தைரியம்தான் இருக்கிறதா?
யார் என்ன சதி செய்தாலும், எத்தனை அவதுாறு பரப்பினாலும், எவ்வளவு போலி செய்திகளை உருவாக்கினாலும், 2026 தேர்தலில் ஏழாவது முறையாக தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

