ADDED : செப் 11, 2025 04:56 AM

சென்னை: த.வெ.க., தலைவர் விஜயின் 'வீக் எண்ட்' பிரசாரத்தை முறியடிக்க, தி.மு.க., தரப்பில் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தலையொட்டி, த.வெ.க., தலைவர் விஜய் தன் பிரசாரத்தை தீவிரப்படுத்துவார் என, அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால், சனிக்கிழமைகளில் மட்டும் பிரசாரம் செய்ய, அவர் முடிவு செய்துள்ளார்.
விஜயின் பிரசாரம் தங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் என தி.மு.க., நினைத்தது. ஆனால், விஜயின் 'வீக் எண்ட்' பிரசாரம், தி.மு.க., தலைமைக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, வாரந்தோறும் விஜயின் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
விஜய் தொடர்ச்சியாக பிரசாரம் செய்தால், அதை சமாளிப்பது அரசுக்கு பெரிய சிரமமாக இருந்திருக்கும். ஆனால், வாரந்தோறும் அவர் பிரசாரம் செய்ய உள்ளார். அதற்கு பதிலடி தரும் வகையில், தி.மு.க.,வில் வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.
விஜய் பிரசாரம் செய்யும் நாளில், அரசு சார்பில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படும்; திட்டம் தொடர்பான அறிவிப்புகள்; அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் மாற்றம்; தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சு என, முக்கிய நிகழ்ச்சிகளை அரங்கேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது.
விஜயின் முதல் பிரசார நாளான 13ம் தேதி, சென்னையில், இளையராஜாவிற்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதை நேரடி ஒளிபரப்பு செய்து, பொதுமக்களின் கவனத்தை விஜயின் பக்கம் இருந்து திசை திருப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதேபோல், பொதுமக்களை திசை திருப்பும் வகையில், பல்வேறு வியூகங்கள் வகுக்கும் பணிகள், அரசின் செய்தித் துறை, தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி, தேர்தல் ஆலோசனை நிறுவனம் வாயிலாக நடந்து வருகிறது.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.