'லெட்டர் பேடில்' கட்சி பெயரை தவிர்த்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
'லெட்டர் பேடில்' கட்சி பெயரை தவிர்த்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
UPDATED : செப் 11, 2025 04:42 AM
ADDED : செப் 11, 2025 04:39 AM

சென்னை : துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை புகழ்ந்துள்ளார்.
அவரது அறிக்கை:
இன்றைய உலகத் தலைவர்களில் முதன்மையானவராக திகழும் பாரதப் பிரதமர் மோடி, இந்தியாவின் இன்றைய இரும்பு மனிதர் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரால், துணை ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்டவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.
நல்வாழ்த்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் அன்பை பெற்றவரும், நம் தமிழ் தேசத்தின் தனிப்பெரும் தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன், வேற்றுமையில் ஒற்றுமை காணும், பாரத நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்வு பெற்றுள்ளது, இந்நாட்டின் பொன்னேட்டில் எழுதப்படும் திருநாள்.
தன் பணிக்காலத்தில் இந்திய தேசத்தை, உயரத்திற்கு எடுத்து செல்ல, மனம் கனிந்த நல்வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய லெட்டர் பேடு
அ.தி.மு.க., கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், புதிதாக தயார் செய்திருக்கும் தன்னுடைய லெட்டர் பேடில், அ.தி.மு.க., பெயரை தவிர்த்துள்ளார்.
துணை ஜனாதிபதியாக வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில், 'ஈரோடு மாவட்டம், கோபி தொகுதி எம்.எல்.ஏ., செங்கோட்டையன்,' என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.