காரில் இருந்த யாரை மறைக்கிறார் இபிஎஸ்: தி.மு.க.,: 'ரெஸ்ட் ரூம்' போனாலும் சொல்லணுமா: இபிஎஸ்.,
காரில் இருந்த யாரை மறைக்கிறார் இபிஎஸ்: தி.மு.க.,: 'ரெஸ்ட் ரூம்' போனாலும் சொல்லணுமா: இபிஎஸ்.,
UPDATED : செப் 19, 2025 04:16 AM
ADDED : செப் 19, 2025 01:09 AM

கடந்த 16ம் தேதி டில்லி சென்ற அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக, தி.மு.க., - ஐ.டி., அணி ஐந்து கேள்விகளை எழுப்பியிருந்தது. சேலம், ஓமலுாரில் நேற்று பேட்டியளித்த பழனிசாமி, அதற்கு பதிலளித்தார்.
அதன் விபரம்:
தி.மு.க., கேள்வி: அமித் ஷாவை சந்திக்க, அரசு வாகனத்தில் சென்றதாக சொல்லும் பழனிசாமி, சந்திப்பு முடிந்து வரும்போது, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள டி.எல்., 2 சி.ஏ.என்., 9009 பதிவெண் கொண்ட கருப்பு 'பென்ட்லி' ரக சொகுசு காரில் வந்தது எப்படி?
பழனிசாமி பதில்: டில்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசு காரில் சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, கட்சி நிர்வாகிகளுடன் சந்தித்து பேசினோம்; என் எழுச்சி பயணம் குறித்து கேட்டார். அப்போது, 'முத்துராமலிங்க தேவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும்' என கோரிக்கை வைத்தேன்.
தி.மு.க., கேள்வி: டில்லிக்கு செல்லும் போதெல்லாம், பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மர்மம் என்ன?
பழனிசாமி பதில்: கார் இல்லாதவர்கள், வேறு காரில் தான் போக வேண்டும். அதை ஒரு குற்றச்சாட்டாக கண்டுபிடித்திருக்கின்றனர். ஸ்டாலின் வெளிநாடு சென்று வந்துள்ளார். அவரிடம் இப்படி கேள்வி கேட்பீர்களா?
தி.மு.க., கேள்வி: கட்சி தொடர்பான சந்திப்பு என்றால், கட்சியினர் உடனிருக்க வேண்டும். அரசு அலுவல் என்றால், அதிகாரிகள் உடனிருக்க வேண்டும்.
தனிப்பட்ட குடும்ப நிகழ்வென்றால், குடும்பத்தினர் இருக்கலாம். ஆனால், அமித் ஷா வீட்டிலிருந்து வெளியே வந்த காரில், பழனிசாமி உடன் இருந்தது யார்?
பழனிசாமி பதில்: அமித் ஷாவை சந்தித்தபோது நேரம் ஆனதால், என்னுடன் வந்த நிர்வாகிகளை அனுப்பி விட்டேன். சாப்பாட்டுக்காக அவர்கள் சென்று விட்டனர்.
தி.மு.க., கேள்வி: அமித் ஷா வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிய பழனிசாமியுடன் காரில் இருப்பவர் யார்; அவர் ஏன் தன் முகத்தை மறைக்க வேண்டும்?
அமைச்சருக்கு நிகரான கண்ணியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருக்கும் பழனிசாமி தன் முகத்தை மறைத்து, அமித் ஷா வீட்டிலிருந்து வெளியேறுவது ஏன்; என்ன அவசியம்; என்ன நிர்ப்பந்தம்; எதை மறைக்கிறார்; யாரை மறைக்கிறார்?
பழனிசாமி பதில்: அமித் ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது, முகத்தை துடைத்தபடி வந்ததை, வேண்டுமென்றே திட்டமிட்டு, சிலர் முகத்தை மூடிச் செல்வதாக பொய் செய்தி பரப்பினர்.
இது வருத்தம் அளிக்கிறது. ஊடகங்களும் நடுநிலையோடு செயல்பட வேண்டும். இனி, 'ரெஸ்ட் ரூம்' சென்றாலும், உங்களிடம் சொல்லி விட்டுத்தான் செல்ல வேண்டும் போல் உள்ளது. இதை, அச்சத்தின் அடிப்படையில் கூறுகிறேன்.
அமித் ஷாவை இந்த நாளில், இந்த நேரத்தில் சந்திக்கப் போகிறேன் என தெரிவித்து விட்டு தான் சென்றேன். முகத்தை மூடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இது குறித்து கேலியும் கிண்டலுமாக பேசி, முதல்வர் ஸ்டாலின் தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார்.
- நமது நிருபர் -