குஜராத்தில் 1,500 துாண்களுடன் எழுப்பப்படும் பிரமாண்ட கோவில்: அடித்தளம் அமைத்து அதானி நிறுவனம் சாதனை
குஜராத்தில் 1,500 துாண்களுடன் எழுப்பப்படும் பிரமாண்ட கோவில்: அடித்தளம் அமைத்து அதானி நிறுவனம் சாதனை
ADDED : செப் 19, 2025 04:11 AM

ஆமதாபாத்:குஜராத்தின் ஜகத் ஜனனி மா உமியா கோவிலுக்கு, 1,500 துாண்கள் தாங்கக்கூடிய அளவிலான மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்து 'அதானி சிமென்ட்' நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
குஜராத்தின் ஆமதாபாதில் ஜகத் ஜனனி மா உமியா கோவில் கட்டப்பட்டு வருகிறது. உலகிலேயே மிக உயரமான கோவில் என்ற பெருமையை பெறும் வகையில், 1,500 துாண்களுடன், தரையில் இருந்து 504 அடி உயரத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமான பணியில், அதானி நிறுவனத்தின் சிமென்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஜகத் ஜனனி மா உமியா கோவிலுக்கான அடித்தளம் அமைக்கும் பணி சமீபத்தில் நடந்தது. மிக உயரமான, 1,5--00 துாண்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்படும் கோவிலின் அடித்தளம் சிறப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, அதானி சிமென்ட் நிறுவனம் மற்றும் 'பி.எஸ்.பி., இன்ப்ரா' நிறுவனம் இணைந்து அடித்தளம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டது.
இதற்காக, அதானி சிமென்டின் தனியுரிம கலவையான 24,100 கன மீட்டர் உடைய 'ஈக்கோ மேக்ஸ் எம். - 45' எனப்படும் கார்பன் கான்கிரீட்டை பயன்படுத்தி அடித்தளம் அமைக்கப்பட்டது.
மூன்று நாட்களாக இரவு பகல் என 54 மணி நேரம் இந்த அடித்தளம் அமைக்கும் பணி நடந்தது. இதில், 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். மொத்தம் 450 அடி நீளம், 400 அடி அகலம், 8 அடி ஆழம் என்ற கணக்கில் மிகச்சிறந்த முறையில் அடித்தளம் அமைக்கப்பட்டது.
கட்டமைப்பின் வெப்ப அழுத்தத்தை குறைக்கும் வகையில், 28 டிகிரி செல்ஷியசுக்கு கீழ் வெப்பநிலையை வைக்கும் வகையில், அடித்தளத்தில் 'கூல்கிரீட் பார்முலேஷன்' பயன் படுத்தப்பட்டுள்ளது.
நவீன பொறியியல் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அடித்தளம் அமைக்கும் பணி, 'கோல்டன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த தகவலை அதானி குழுமத்தின் சிமென்ட் வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் பஹேட்டி உறுதிபடுத்தியுள்ளார்.