அமலாக்கத்துறை குற்றச்சாட்டு எதிரொலி பிறந்த நாள் விழாவை தவிர்க்கும் நேரு
அமலாக்கத்துறை குற்றச்சாட்டு எதிரொலி பிறந்த நாள் விழாவை தவிர்க்கும் நேரு
ADDED : நவ 03, 2025 12:33 AM

திருச்சி: திருச்சியில் அமைச்சர் நேரு பிறந்த நாளுக்காக, அவரது படத்துடன் வைக்கப்பட்ட பேனர்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளன.
வரும், நவ., 9ம் தேதி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவின் பிறந்த நாள். ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளை, திருச்சி தி.மு.க.,வினர் பிரமாண்டமாக கொண்டாடுவர்.
வழக்கம் போல், இந்த ஆண்டும் நவ., 9ம் தேதி அமைச்சர் நேரு பிறந்த நாளுக்காக, அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் , கட்சி நிர்வாகிகள் சார்பில், திருச்சி மாநகர பகுதியில் பிரமாண்ட பேனர்கள் வைக்கப் பட்டன. அவை, நேற்று முன்தினம் இரவில் அகற்றப்பட்டன.
இது குறித்து, திருச்சி தி.மு.க.,வினர் கூறியதாவது:
அமலாக்கத் துறையினரால் ஊழல் குற்றச் சாட்டுக்கு ஆளாகி உள்ளதால், அமைச்சர் நேரு அப்செட்டாகி உள்ளார். இந்த சூழலில், பிறந்த நாள் கொண்டாட்டங்களை அவர் விரும்பவில்லை.
அதோடு, வரும் 10ல், திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின், திருச்சி வரவுள்ளார்.
முதல்வர் வரும் வேளையில், தனக்காக பெரிய அளவில் பேனர்கள் வைப்பது, கட்சி தலைமையின் அதிருப்திக்கு உள்ளாகக்கூடும் என்பதால், பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்ட பேனர்களை உடனடியாக அகற்ற, அமைச்சர் நேரு கண்டிப்புடன் உத்தரவிட்டு உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையில், அமைச்சர் நேரு நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'நவ., 9ல் நான் திருச்சியில் இருக்க மாட்டேன்; அதனால், எனக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, கட்சியினர், பொதுமக்கள், நலன் விரும்பிகள் என யாரும் என்னை சந்திக்க இல்லத்துக்கோ, அலுவலகத்துக்கோ வர வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.

