சோலார் மின் உற்பத்தியை துவங்க முடியாமல் தவிக்கும் குஜராத் நிறுவனம்: எதிர்ப்பு பின்னணியில் ஆளுங்கட்சியினர்?
சோலார் மின் உற்பத்தியை துவங்க முடியாமல் தவிக்கும் குஜராத் நிறுவனம்: எதிர்ப்பு பின்னணியில் ஆளுங்கட்சியினர்?
ADDED : நவ 03, 2025 12:12 AM

துாத்துக்குடி: துாத்துக்குடியில், சோலார் மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த முடியாத வகையில், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னணியில் ஆளுங்கட்சியினர் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
துாத்துக்குடி மாவட்டத்தில், 25-க்கும் மேற்பட்ட பெரும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, 2018ல் நடந்த மக்கள் போராட்டத்தால், அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
தொழில் வளர்ச்சி தொடர்ந்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் துாத்துக்குடியில் தொழில் வளர்ச்சி கொண்டு வரப்படும் என அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக, பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்ட போதிலும், வின்பாஸ்ட் மின் வாகன தொழிற்சாலை மட்டுமே தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
குஜராத் மாநிலம், ஆமதாபாதைச் சேர்ந்த அமசோ சோலார் பார்ம் என்ற நிறுவனம், 90 ஏக்கர் பரப்பளவில், 400 கிலோவாட் சோலார் மின் உற்பத்தியை துவங்க திட்டமிட்டு, அடிப்படை பணிகளை துவங்கியது.
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பவர் கிரீட் நிறுவனத்திற்கு கொண்டு செல்ல, பெங்களூரைச் சேர்ந்த டாரன்ட் அக்ரா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் வாயிலாக, 300 மின் கம்பங்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக, தமிழ்நாடு பசுமை சக்தி நிறுவனத்திடமும், துாத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடமும் முறையாக அனுமதி பெற்று பணி நடந்து வருகிறது. ஓட்டப்பிடாரம் தாலுகா, முப்பிலிவெட்டி கிராமத்தில், குளங்கள், அரசு புறம்போக்கு நிலங்களில் மின் கம்பங்களை நடவு செய்யக்கூடாது என, கிராமத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமாதான கூட்டம் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் அக்., 29ம் தேதி ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சண்முகவேல் முன்னிலையில் சமாதான கூட்டம் நடந்தது.
இதில், தி.மு.க., ஒன்றிய செயலரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான இளையராஜா, வழக்கறிஞர் கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பான அறிக்கையை ஆர்.டி.ஓ.விற்கு தாசில்தார் அனுப்பி வைத்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன் பணிகளை துவங்கிய நிலையில், மார்ச் 31ல் மின் உற்பத்தியை துவங்க சோலார் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. தொடர்ந்து எழும் எதிர்ப்பால், திட்டமிட்டபடி உற்பத்தியை துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த சிலர், கிராம மக்களை துாண்டிவிட்டு பணிகளை தடுத்து வருவதாக சோலார் நிறுவனம் தரப்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் நேரடியாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அமசோ சோலார் பார்ம் நிறுவன திட்ட மேலாளர் நிவாஸ் கூறியதாவது: கிராம மக்கள் யாரும் மொத்தமாக எதிர்க்கவில்லை. அவர்களை ஒரு நபர் துாண்டிவிட்டு எதிர்க்க செய்கிறார். பிரச்னை தொடர்பாக, நாங்கள் பேசி வருகிறோம். சோலார் மின் உற்பத்திக்கான பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

