ஜி.எஸ்.டி., : நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
ஜி.எஸ்.டி., : நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
ADDED : செப் 24, 2025 05:06 AM

திருத்தப்பட்ட பொருட்கள் மற்றும் ஜி.எஸ்.டி., விகிதங்களின் பலன்களை நுகர்வோருக்கு வழங்கத் தவறும் நிறுவனங்கள், வியாபாரிகளுக்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் நிதிகரே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசு, ஜி.எஸ்.டி.யில் மாபெரும் மாற்றத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம் கடந்த 22ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
எனினும், மாற்றியமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. பலன் பல இடங்களில் நுகர்வோருக்கு முழுமையாக சென்றடையவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை செயலாளர் நிதிகரே கூறுகையில், 'ஜி.எஸ்.டி., சலுகைகளை நுகர்வோருக்கு முழுமையாக வழங்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேட்டில் ஈடுபடும் நிறுவனங்களை கண்காணிக்கிறோம்' என்றார்.
- நமது நிருபர் -