ADDED : ஜூன் 17, 2026 05:36 AM

- எஸ்.ஆர்.சேகர் -பா.ஜ., மாநில பொருளாளர்
ஊருக்குள்ள ஒரு செடியையும் காணும்... இவரு ஏதோ நந்தவனத்தைப் பற்றி பேசுகிறார் என்று, இந்த தலைப்பை பார்த்து எண்ணுவது எதார்த்தம் தான். 15 ஆண்டுகளுக்கு முன், மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வே இல்லை. கடந்த 2021லேயே ஆட்சியைப் பிடித்திருக்க வேண்டும். அது நுாலிழையில் கிடைக்காமல் போனது. 2026ல் திட்டமிட்டு வெற்றி பெற்றோம். அசாமில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி, புதுச்சேரியில் மீண்டும் ஆட்சி. கேரளாவில் ஒன்றிலிருந்து மூன்று எம்.எல்.ஏ., என்று நுழைய முடியாத இடங்களில் எல்லாம் பா.ஜ., நுழைந்துள்ளது. இந்தியாவின், 70 சதவீத நிலப்பரப்பில் பா.ஜ.,வின் ஆட்சி.
இந்நிலையில், 2026ல் தமிழகத்தில் பா.ஜ.,வின் வெற்றி; தமிழக வெற்றி கழகத்தின் எதிர்பாராத சுனாமியிலே சுருண்டு போனது உண்மைதான். அப்படியானால், உங்கள் கட்சியின் ஒரு தலைவரும் வெளியேறி விட்டார், 2031 பற்றி அமித் ஷா பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இது கனவு தானே என பேசும் குரலும் கேட்கிறது.
அமித் ஷா சொன்னதை செய்வார், ஆனால் அவர் கடவுள் அல்ல. குஜராத்தில், உள்துறை அமைச்சராக இருந்த போதும் காங்கிரசால் பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, உள்நாட்டிலேயே நாடு கடத்தப்பட்டார்.
அதற்குப் பின், உ.பி., முதல் தொடர்ந்து, 15 மாநிலங்களில் பா.ஜ., ஆட்சியை நிறுவ காரணமானார். தற்போது, 22 மாநிலங்களில் பா.ஜ., மற்றும் தே.ஜ., கூட்டணியின் ஆட்சி நடக்கிறது. கடந்த நவம்பர், 2025 பா.ஜ., மைய குழு கூட்டத்தில், '2026ல் தி.மு.க., தோற்கும். அதற்கு ஆறு மாதம் கழித்து அந்த கட்சியே கலகலக்கும்' என்றார்; அதில் ஒன்று நடந்து விட்டது.
அதற்கு நீங்கள் எப்படி காரணம் என கேட்பீர்கள். எது எப்படி இருந்தாலும், அவர் கணக்கு தப்பவில்லை என்பதற்காக சொல்லுகிறேன்.
நேற்றைய டில்லி கூட்டத்தில், அமித் ஷா தமிழகத்தின் இன்றைய நிலை கண்டு உற்சாகமூட்டும் வார்த்தைகள், உற்சாகமூட்டுவதற்காக பேசவில்லை எதார்த்தமாக பேசினார்.
'மூன்றில் இரு பங்கு பெற்று அசாமை தக்க வைத்தோம். மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்றோம். இது தேர்தல் வெற்றி அல்ல, ஊடுருவல்காரர்கள் மேற்கு வங்கத்தின் தலையெழுத்தை தீர்மானிக்க முடியாது என்பதை நிரூபித்து காண்பித்தோம். இப்போது, அடுத்த அஜெண்டா தமிழகம் தான்' என்றார்,
அவரது பேச்சில் உறுதி தெரிந்தது. 'நாங்கள் இப்போது, பிரீயாக இருக்கிறோம். தமிழகத்தை திராவிட கழகங்களில் இருந்து மீட்டு, தமிழ் மக்கள் அதைவிட மோசமான இன்னொரு கழகத்தின் கையிலே ஒப்படைத்து இருக்கிறார்கள். அதை வரும், 5 ஆண்டுகளில் மீட்போம். அதற்கு, எங்களது உறுதியான திட்டமிடலும், அனுபவங்களும், கடுமையான உழைப்பும் கை கொடுக்கும்' என்றார்.
பா.ஜ., வளர்ந்து வந்த பாதை கரடு முரடானது. இங்கே கொள்கையும், சித்தாந்தமும் மட்டுமே தலைமை ஏற்கும்.
கடந்த 1997ல், பா.ஜ.,வின் வாஜ்பாயின், 13 நாள் அரசாங்கத்தை காப்பாற்ற ஜார்ஜ் பெர்னாண்டசும், முலயாம் சிங் யாதவும், அத்வானியிடம் வந்து உங்கள் தேர்தல் அறிக்கையில் சட்டப்பிரிவு 370 மற்றும் ராமர் கோவிலும் இடம் பெறாமல் இருந்தால், நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம் என்றனர்.
அவர்கள் பேச்சை முடிப்பதற்கு முன், அப்படி ஒரு ஆட்சி எங்களுக்கு தேவையில்லை என்று சொன்னார் அத்வானி.
கடந்த 1971 - 72களில் பாரதிய ஜன சங்கத்தின் தலைவராக இருந்த ஸ்தாபக தலைவர்களில் ஒருவரான பால்ராஜ் மதோக், கட்சியின் சித்தாந்தத்துக்கு எதிராக செயல்பட்டதால், தலைமை பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
பாபர் மசூதி இடிப்புக்கு பின்னாலே, மக்களால் வரவேற்கப்பட்ட கல்யாண் சிங், கட்சியில் இருந்து வெளியே போனார்; பின் காணாமல் போனார். உமா பாரதி, எடியூரப்பாவும், கேசுபாய் பட்டேலும் இன்னும் சில உதாரணங்கள். 76, ஆண்டுகள் சித்தாந்த ரீதியாக நீண்ட பயணம். பா.ஜ., என்னும் வற்றாத ஜீவநதி, பல இடங்களில் கரை புரண்டு ஓடுகிறது.
சில இடங்களில் அது குறுகலாக இருந்தாலும், ஆற்றல் பெருகித்தான் இருக்கிறது. அது சமரசம் செய்து கொள்ள முடியாத சித்தாந்தத்தின் மாபெரும் வடிவம்.
தமிழகம் பா.ஜ.,விற்கு ஒரு பெரும் பொருட்டு அல்ல. இப்படி எழுதுவது அகம்பாவத்தின் வெளிப்பாடல்ல.
ஆனால், முந்தைய காலகட்ட வெற்றிகளில் ஏற்பட்ட, தெம்பு, தைரியம், உத்வேகம் இனி தமிழகத்தின், ஒவ்வொரு அடியையும், அழுத்தமாகவும், ஆழமாகவும் அதே சமயம் விரைவாகவும், வேகமாகவும் பா.ஜ., எடுத்து வைக்கும். இதை வருங்காலங்களில் காணப்போகிறீர்கள்.
இன்று பா.ஜ.,விற்கு தமிழகத்தில் இருக்கிற மிகப்பெரிய அரசியல் வாய்ப்பு, மேற்கு வங்கத்தின் வாய்ப்பைப் போல தொடங்கி இருக்கிறது. கழகங்கள் வேண்டாம் என்பவர்கள், த.வெ.க.,வோடு சேர்ந்த பின், அனைவரும் ஒரு பக்கம்; பா.ஜ., மறுபக்கம் என்னும் நிலை, இன்று தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளது.
இன்னும் பா.ஜ., பெயரைச் சொல்லி பயங்காட்டியே கழகங்கள் வளர்ந்து வருகின்றன. அதுவே பா.ஜ.,வின் வலிமைக்கு தெளிவான உதாரணம். வளர்ச்சியின் தேசம் இந்தியா என்பதோடு, மோடியின் தேசம் இந்தியா; மோடியின் நாடு இந்தியா என, வெளிநாட்டினர் புகழும் வண்ணம், 12 ஆண்டுகள் இந்த நாட்டை உயர்த்தி பிடித்த வல்லவர், மோடி.
எந்த பிரதிபலனும் விளம்பரம் இல்லாமல், தமிழுக்கும், தமிழகத்துக்கும், உலகெங்கும் புகழ் சேர்த்த தலைவர் மோடி. பாராளுமன்றத்தில் செங்கோல் தமிழுக்கு, வட இந்திய மாநில பல்கலைக்கழகங்களில் இருக்கை; காசியில் தமிழ்ச்சங்கம். உலக நாடுகளில், பேசுகின்ற போது கூட திருவள்ளுவரையும் தமிழ் புலவர்களின் பெருமைகளையும் சுட்டிக்காட்டும் பண்பு.
எந்த பிரதிபலனும் பாராமல் உள்ளார்ந்த அன்போடு, மோடியும் பா.ஜ.,வும் தமிழகத்தின் மீது வைத்துள்ள அன்பு பிடிப்புக்கு, இவை உதாரணம்.
இந்த மாபெரும் மோடி என்னும் வளர்ச்சியின் நாயகனின் வழியிலே சித்தாந்த ரீதியாக பா.ஜ., வேகநடை போடுகிறது. இன்றைய தமிழகத்தின் மதச்சார்பின்மை உண்மையான மதச்சார்பின்மை அல்ல;
அது, இந்து மதச்சார்பின்மை என்பதை வெளிப்படுத்தும் மற்ற கட்சிகளின் முகமூடியை கிழிக்கும் காலம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு மதத்தின் ஆக்கிரமிப்பில் இன்று தமிழகம் சிக்கி இருக்கிறது; இன்னொரு மதம் அதற்கு பக்கபலமாக இருக்கிறது.
ஹிந்துக்கள் இப்போது தான் ஓரங்கட்டப்பட்டு வருவதை உணர ஆரம்பித்திருக்கிறார்கள்; பள்ளிகளில் மதச் சின்னம் கூடாது, என்பது ஹிந்துக்களுக்கு மட்டுமே.
இனி கல்விச்சாலைகளில் மாற்று மத பிரசாரம் மேலோங்கும் சட்டசபையிலும் கூட மதச்சார்பின்மை புறக்கணிக்கப்பட்டு, தினசரி பைபிள் வாசகங்களே சபாநாயகரால் வாசிக்கப்படுகிறது.
இந்த என்னுடைய எழுத்துகள் மதவாடை அதிகமாக உள்ள மத துவேஷ எழுத்து அல்ல; எந்த காலத்தில் ஹிந்து மாற்று மதங்களை வெறுத்தான். அப்படி இருந்திருந்தால், இன்று இந்தியாவிலே ஹிந்து மதம் தவிர வேறு மதம் இருந்திருக்க முடியாது அல்லவா;
ஹி ந்துவுக்கு மதச்சார்பின்மையை, மற்றவர்கள் கற்பிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், அவன் ஒடுக்கப்படுவது தான், மாற்று மத ஆட்சியாளர்களின் செயல்பாடாக என்றும் இருக்கிறது. வளர்ந்த இந்தியா, இதயப்பூர்வமான உண்மையாக தமிழின் மீது உள்ள அக்கறை கொண்ட பா.ஜ.,வின் செயல்பாடுகள்.
இவைகள் இணைந்து, வரும் ஐந்து ஆண்டுகளில் பா.ஜ., மாபெரும் பலம் பெறும் வல்லமை பெறும். இதை கண்கூடாக பார்ப்பதற்கான திட்டம், டில்லி தலைமை தயாரித்து விட்டது. செயல்திட்டங்கள் தீர்மானிக்கப்பட்டு விட்டன. அவை இப்போது அமலாக்கம் துவங்கி விட்டது.
இது தொண்டர்களை உத்வேகப்படுத்துவதற்கோ அல்லது தமிழகத்தில் பா.ஜ., அடைந்த தோல்வியை சரி கட்டவோ எழுதப்படுவது அல்ல. இது திட்டமிட்ட உறுதிப்பாட்டின் வெளிப்பாடு. வரப் போகும் வெற்றிக்கான முன்னோட்டம்.
இந்த பதிவை இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்து படிக்கின்றவர்கள், இது மிகைப்படுத்தப்பட்ட பதிவு அல்ல என்பதை உணர்வார்கள். அதுவே இந்த எழுத்தின் சத்தியம்; ஆம், அமித் ஷாவின் அடுத்த இலக்கு ஒளிமயமான, காவிமயமான தமிழகம்.
