ஆசிரியர் தகுதிதேர்வு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு
ஆசிரியர் தகுதிதேர்வு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு
UPDATED : செப் 12, 2025 12:00 AM
ADDED : செப் 12, 2025 10:33 AM

சென்னை:
'ஆசிரியர்களுக்கான, 'டெட்' தேர்வு தொடர்பாக, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்,'' என அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாத, அனைத்து பணியில் உள்ள ஆசிரியர்களும், இரண்டு ஆண்டுகளுக்குள், அந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்; இல்லையெனில் அவர்கள் கட்டாய ஓய்வு பெறலாம்.
கவலைக்குரியது
ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான பணிக் காலம் உள்ள ஆசிரியர்கள், பதவி உயர்வுக்கான தகுதி பெறாமல், ஓய்வு பெறும் வரை, தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் தரம் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். எதிர்கால நியமனங்களுக்கு, 'டெட்' கட்டாய தேவையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை, தமிழக அரசு முழுமையாக ஆதரிக்கும்.
அதேநேரம், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள், 'டெட்' தேர்ச்சி பெற வேண்டும் என்பது, கவலைக்குரியது. ஏற்கனவே பணியாற்றும் ஆசிரியர்கள், அவர்கள் நியமனத்தின்போது, நடைமுறையில் இருந்த, சட்டங்கள், விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப பணி அமர்த்தப்பட்டனர்.
தற்போது, அவர்களுக்கு புதிய தகுதியை விதித்து, அவர்கள் தகுதி பெறவில்லை என்றால், கட்டாய ஓய்வு அளிப்பது நியாயம் கிடையாது. இந்த தீர்ப்பு, அதிகளவு கட்டாய ஓய்வுக்கு வழி வகுக்கும்.
தகுதிகள் அவசியம் இதனால், தமிழகம் முழுதும் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும். குறுகிய காலத்தில் 'டெட்' தேர்ச்சி பெற்றவர்களை ஆசிரியராக பணியமர்த்துவது சாத்தியமற்றது. குழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் - 2009 பிரிவு 23 - ன் கீழ், புதிய நியமனங்களுக்கு மட்டுமே, குறைந்தபட்ச தகுதிகள் அவசியம்.
கடந்த, 2010 ஆக., 23ம் தேதி, 'டெட்' தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது, தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் வெளியிட்ட அறிவிப்பில், அந்த தேதிக்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, இந்த விதிகள் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் டெட் தேர்வு தீர்ப்புக்கு எதிராக, மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. ஆசிரியர் சமூகங்களுடன் தமிழக அரசு உறுதியாக நிற்கும் என, உறுதியளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருத்தம் செய்யலாம்
ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் 11ம் தேதி துவங்கி, நேற்றுமுன் தினம் மாலை 5:00 மணி வரை நடந்தது. மொத்தம் 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், 'டெட்' தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், அதில் திருத்தம் செய்ய அவகாசம் கோரினர். அதன்படி, நாளை வரை திருத்தங்கள் செய்ய, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை திருத்தம் மேற்கொண்டால், மீண்டும் திருத்தம் செய்ய முடியாது. விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இதுவே இறுதி வாய்ப்பு என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.