ஜவுளி ஆலை கழிவுநீரை சுத்திகரிக்க நவீன இயந்திரம்: சென்னை ஐ.ஐ.டி. 'ஸ்டார்ட்அப்' நிறுவனம் உருவாக்கம்
ஜவுளி ஆலை கழிவுநீரை சுத்திகரிக்க நவீன இயந்திரம்: சென்னை ஐ.ஐ.டி. 'ஸ்டார்ட்அப்' நிறுவனம் உருவாக்கம்
UPDATED : செப் 12, 2025 12:00 AM
ADDED : செப் 12, 2025 10:35 AM

சென்னை:
சென்னை ஐ.ஐ.டி.,யின் 'ஸ்டார்ட்அப்' நிறுவனம், நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கிய, கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரம், ஈரோடு மற்றும் பெருந்துறையில், ஜவுளி உற்பத்தி ஆலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.,யின், தொழில் ஊக்குவிப்பு நிறுவனம், புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும், 'ஸ்டார்ட்அப்' நிறுவனங் களுக்கு, நிதியுதவி அளித்து, ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கிறது.
ஜவுளி உற்பத்தி ஆலைகளில் இருந்து, தினமும் 4 முதல் 5 லட்சம் லிட்டர் கழிவுநீர் வெளியேறுகிறது. இவற்றால், நீர் நிலைகள் மாசடை கின்றன. இதற்கு தீர்வு காண, சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.
சென்னை ஐ.ஐ.டி.,யின், தொழில் ஊக்குவிப்பு நிறுவனத்தின், 'ஜே.எஸ்.பி., என்விரோ' எனும் 'ஸ்டார்ட்அப்' நிறுவனம், பாக்டீரியாக்களை பயன்படுத்தி, கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டது. அதன் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்தை, செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது. கடந்த 2023 - 24ம் ஆண்டில், ஈரோட்டில் உள்ள ஜவுளி உற்பத்தி ஆலையில், 'பீட்ஸ்' எனப்படும் இயந்திரம் நிறுவப்பட்டது.
தற்போது, பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள, ஜவுளி உற்பத்தி ஆலையில், 'பீட்ஸ்' கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஜவுளி உற்பத்தி ஆலைகளில், கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு, பயன்பாட்டில் உள்ளன. அவற்றின் கருவிகளில் ரசாயன சுத்திகரிப்புக்காக, அதிக அளவில் வேதி பொருட்கள் மற்றும் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகின்றன.
இதனால், அதிக அளவு மின்சாரம் தேவைப்படுகிறது. இதில் திடக்கழிவு அதிகம் தேங்குகிறது. ஆனால், சென்னை ஐ.ஐ.டி.,யின், 'ஜே.எஸ்.பி., என்விரோ ஸ்டார்ட்அப் நிறுவனம்' உருவாக்கிய, 'பயோ எலக்ட்ரோகெமிக்கல் அனெரோபிக் டைஜஸ்டர் சிஸ்டம்' எனும் பீட்ஸ் இயந்திரத்தில், கழிவுநீரை சுத்திகரிக்க வேதி பொருட்கள், ஆக்சிஜன் பயன்படுத்தப்படவில்லை. இதனால், சுகாதாரத்தை பேண முடியும்.
இயந்திரத்தில் என்ன புதுமை?
'ஸ்டார்ட்அப்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, பிரியதர்ஷினி மணி கூறியதாவது:
ஒரு ஜவுளி உற்பத்தி ஆலையில் இருந்து, 5 லட்சம் லிட்டர் கழிவுநீர் தினமும் வெளியேறுகிறது. இதை சுத்திகரிப்பது அவசியம். இதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம்.
அதன் அடிப்படையில், 'பீட்ஸ்' இயந்திரத்தை உருவாக்கினோம். இதன் வாயிலாக, கழிவுநீரை சுத்திகரிக்கும்போது, எந்தவித ரசாயனமும் பயன் படுத்துவதில்லை. கலனில் உள்ள பாக்டீரியா, கழிவுகளை உட்கொண்டு, அவற்றை சுத்திகரிக்கிறது. இதற்கு மின்சாரம் தேவையில்லை. இதன் வாயிலாக உருவாகும், திடக்கழிவுகளின் அளவும், 90 சதவீதம் குறையும்.
இதில், சுத்திகரிப்புக்கான கட்டணம் வெகுவாக குறையும். தற்போது, ஜவுளி உற்பத்தி ஆலையில், இதன் பயன்பாட்டை நிரூபித்துள்ளோம்.
மேலும், பால் மற்றும் குளிர்பான தொழிற்சாலைகள், மருந்து நிறுவனங்கள் என, கழிவுநீர் வெளியேறும், அனைத்து தொழிற்சாலைகளுக்கும், இந்த கருவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்க, 30 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கணக்கிடப் பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.