மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி; தனி ஆசிரியர் இல்லாமல் சிக்கல்
மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி; தனி ஆசிரியர் இல்லாமல் சிக்கல்
UPDATED : செப் 11, 2025 12:00 AM
ADDED : செப் 11, 2025 08:36 AM

கோவை:
கோவை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு, தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியின் முக்கிய நோக்கம் மாணவியருக்கு தன்னம்பிக்கையையும், பாதுகாப்பையும் ஏற்படுத்துவதாகும்.
மூன்று மாதங்களுக்கு, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வீதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்பம் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. மாநகராட்சி பள்ளிகளில் கராத்தே பயிற்சி பெறுவோருக்கு, கூடுதலாக சிலம்பம் போன்ற வேறு பயிற்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, 1 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் மதியம் 2 - 3 மணி அல்லது 3 - 4 மணியளவில் பயிற்சி அளிப்பதால், அன்றாட பாடவேளைகள் பாதிப்பதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
சில பள்ளிகளில் பயிற்சியாளர்கள் இல்லாததால், தற்காப்பு கலை பயிற்சியை மேற்பார்வையிட ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதுவும் சிக்கலை ஏற்படுத்துகிறது.
கல்வியாளர்கள் கூறுகையில், 'தற்காப்பு கலை பயிற்சிகளுக்கு என, தனியாக உடற்கல்வி ஆசிரியர்கள் அல்லது பகுதி நேர ஆசிரியர்களின் பங்களிப்பு இருந்தால் மட்டுமே இப்பயிற்சி சிறப்பாகவும், பாடவேளைகளை பாதிக்காமலும் நடைபெறும். நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன.
இத்திட்டம் மாணவியருக்கு பயனளிக்க வேண்டுமெனில், பயிற்சி நேரம் மற்றும் ஆசிரியர்களின் பங்கு குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்றனர்.