பாரதியாரின் கையெழுத்து பிரதிகள் மின் நுாலகத்தில் பதிவேற்றம்
பாரதியாரின் கையெழுத்து பிரதிகள் மின் நுாலகத்தில் பதிவேற்றம்
UPDATED : செப் 11, 2025 12:00 AM
ADDED : செப் 11, 2025 08:35 AM

சென்னை:
'பாரதியாரின் கையெழுத்து பிரதிகள், அவரது நினைவு நாளையொட்டி, தமிழ் மின் நுாலகத்தில் தனி தொகுப்பாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன' என, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழ் இணைய கல்வி கழகத்தின் தமிழ் மின் நுாலகம் 2017 முதல் பயன்பாட்டில் உள்ளது. இதில், கலை, இலக்கியம், சமயம், வரலாறு, மருத்துவம், அறிவியல் என, பல்வேறு துறைகளை சார்ந்த அரிய நுால்கள், ஓலைச்சுவடிகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப ரீதியாக இது மேம்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழ், பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் மற்றும் பிற மொழிகளில் உள்ள கல்வெட்டுகள் குறித்த தகவல்களும் இதில் இடம் பெற்றுள்ளன. அரிய நுால்கள், ஆவணங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு, எழுத்தாளர் விபரம் உள்ளிட்ட குறிப்புகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த பாரதியாரின் கையெழுத்து பிரதிகள், மின் பதிப்பாக்கம் செய்யப்பட்டு உள்ளன.
பாரதியாரின் குயில், சக்தி பாடல்கள், சந்திரிகையின் கதை, விடுதலை உள்ளிட்ட முக்கிய படைப்புகளின் கையெழுத்து பிரதிகள், 13 தொகுதிகளில், 462 பக்கங்களாக, அவரது நினைவு நாளையொட்டி, தமிழ் மின் நுாலகத்தில் தனி தொகுப்பாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.