வேல்ஸ் பல்கலையில் பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம்
வேல்ஸ் பல்கலையில் பிரபலங்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம்
UPDATED : செப் 13, 2025 12:00 AM
ADDED : செப் 13, 2025 09:28 AM

சென்னை:
வேல்ஸ் பல்கலையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குனர் வெற்றி மாறன், தொழில் அதிபர் ஏ.எம்.கோபாலன் ஆகியோருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
சென்னை, பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலையில், 16வது பட்டமளிப்பு விழா நடந்தது. மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
அவர் பேசுகையில், ''பட்டம் பெற்ற மாணவர்கள், நாட்டிற்கான பொறுப்பு, புதுமை மற்றும் சேவையை, தங்கள் வாழ்க்கை பயணத்தில் முன்னிறுத்த வேண்டும்,'' என்றார்.
வேல்ஸ் பல்கலை வேந்தர் ஐசரி கணேஷ் பேசியதாவது:
வணிகம், விளையாட்டு மற்றும் கலைத்துறையில், லட்சக்கணக்கான மக்களை ஊக்குவித்தவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது, எங்களுக்கு பெருமை.அவர்களின் பயணம், கடின உழைப்பு, விடாமுயற்சியின் சின்னமாக திகழ்கிறது. மாணவர்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும், முன்மாதிரியாக அவர்கள் இருக்கின்றனர்.
வேல்ஸ் அறக்கட்டளை கீழ் இயங்கும், இப்பல்கலை நுாற்றுக்கும் மேற்பட்ட இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.
யு.ஜி.சி., - ஏ.ஐ.சி.டி.இ., என்.எம்.சி., ஐ.என்.சி., - பி.சி.ஐ., என்.சி.டி.இ., போன்ற அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்ட இப்பல்கலையில், 18 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, 1,100 பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
பல்கலை 'நாக் ஏ பிளஸ் பிளஸ்' தர சான்றிதழ் பெற்றுள்ளது. கடந்த ஆண்டுக்கான பல்கலை தர வரிசையில், 101வது இடம் பிடித்ததுடன், மருந்தியல் துறை, 61வது இடத்தை பெற்றுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், 4,992 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இவர்களில், 3,631 பேர் இளநிலை; 1,155 பேர் முதுநிலை; இருவர் எம்.பி.எல்; 204 பேர் முனைவர் பட்டம் பெற்றனர்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், திரைப்பட இயக்குநர் வெற்றி மாறன், ஸ்ரீகோகுலம் குழுமம் தலைவர் ஏ.எம்.கோபாலன் ஆகியோர் டாக்டர் பட்டம் பெற்றனர்.