அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 76 சதவீத இடங்கள் நிரம்பின
அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் 76 சதவீத இடங்கள் நிரம்பின
UPDATED : செப் 13, 2025 12:00 AM
ADDED : செப் 13, 2025 09:25 AM

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டில், 76 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன.
தமிழகத்தில் கல்லுாரி கல்வி இயக்ககத்தின் கீழ், 180 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், இளநிலை பட்டப்படிப்புகளில், 1.26 லட்சம் இடங்கள் உள்ளன.
இந்தாண்டு தற்போது வரை மொத்தமுள்ள 96,000 இடங்கள் அதாவது, 76.2 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. இவற்றில், பி.காம்., - பி.காம்., கார்ப்பரேட் செகரட்டரிஷிப், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ., பொருளாதாரம் போன்ற பாடங்களை மாணவர்கள் விரும்பி தேர்வு செய்துள்ளனர்.
இதனால், அந்த பாடப்பிரிவுகளில் 90 சதவீத இடங்கள் முழுதும் நிரம்பி உள்ளதாக, உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், கடந்த ஆண்டுகளை போலவே நடப்பு கல்வியாண்டிலும், பி.எஸ்சி., கணிதப் பிரிவில் மாணவர் சேர்க்கை வெகுவாக சரிந்திருக்கிறது.
கணிதப் பாடத்தில் மொத்தமுள்ள 7,500 இடங்களில், 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல கல்லுாரிகளில் கணித துறையில் ஒற்றை இலக்கத்தில் தான் சேர்க்கை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, பி.ஏ., ஆங்கில பாடத்தையும் குறைவான மாணவ - மாணவியரே தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது.
பள்ளிப்படிப்பை நிறைவு செய்து, கல்லுாரியில் சேராத மாணவ - மாணவியரை கண்டறிந்து, 'உயர்வுக்கு படி' திட்டத்தின் கீழ், அவர்களை கல்விப் பாதைக்கு மீண்டும் அழைத்துச் செல்ல கலெக்டர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
விழிப்புணர்வு அவசியம்
தமிழக அரசு கல்லுாரி ஆசிரியர் கழக பொதுச்செயலர் சுரேஷ் கூறுகையில், “நடப்பு கல்வியாண்டு, கணிதப் பாடத்தில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கணிதப் பாடமே அனைத்திற்கும் அடிப்படை.
“எனவே, இந்த விவகாரத்தில் அரசு தீர்வு காண வேண்டும். பள்ளி அளவிலேயே, கணிதப் பாடத்தின் முக்கியத்துவம், அதில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,” என்றார்.