UPDATED : நவ 04, 2025 08:06 AM
ADDED : நவ 04, 2025 08:07 AM

கோவை:
சைபர் அச்சுறுத்தல்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கணினி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு பயிற்சி கோவையில் நடைபெற்றது.
அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சியில், கணினி பயிற்றுநர் நிலை-1ல் பணியாற்றும் 55 கணினி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
பயிற்சியின் போது, செயற்கை நுண்ணறிவு கருவிகள் மற்றும் ஏஐ மாடியூல் டூல்களை கல்வித் துறையில் எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்துவது குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
இணையத்தின் வழியாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திக்கக்கூடிய சைபர் அச்சுறுத்தல்கள், ஆன்லைன் பாதுகாப்பு நடைமுறைகள், கடவுச்சொல் பாதுகாப்பு, இணைய வழி குற்றங்களை தவிர்ப்பது போன்றவை குறித்து நிபுணர்கள் வழிகாட்டினர்.
இரண்டு நாள் நடந்த இப்பயிற்சியில், கணினி ஆசிரியர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதோடு, பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டிருந்தாக, பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

