வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க பெண்களின் தலைமைத்துவம் முக்கியம்; சபாநாயகர் ஓம்பிர்லா
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க பெண்களின் தலைமைத்துவம் முக்கியம்; சபாநாயகர் ஓம்பிர்லா
ADDED : செப் 15, 2025 06:38 PM

புதுடில்லி: வரும் 2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க பெண்களின் தலைமைத்துவமும், பங்களிப்பும் முக்கியமானது என சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார்.
ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் பெண்கள் அதிகாரமளிப்பது தொடர்பான முதல் தேசிய குழுக்களின் மாநாட்டைத் தொடங்கி வைத்து, ஓம்பிர்லா பேசியதாவது: உள்நாட்டு பொருட்களை தயாரிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும். சுய உதவிக்குழுக்கள் மூலம் பொருளாதார அதிகாரமளிப்பதில் பெண்கள் ஏற்கனவே முக்கிய பங்கு வகிக்கின்றனர். பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்பது ஒரு ஆப்ஷன் அல்ல. அது அவசியம். இது பெண்களை படைப்பாளிகள் மற்றும் தலைவர்களாக நிலை நிறுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையாகும்.
அதிகாரமளித்தல்
நான் விரைவில் மாநில சட்டசபை சபாநாயர்களுக்கு பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் மேம்பாடு கமிட்டியை அமைக்க வலியுறுத்தி கடிதம் எழுதுவேன். 29 மாநிலங்களில் 16 மாநிலங்களில் மட்டுமே பெண்களுக்கு அதிகாரமளித்தல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாநிலங்கள், பெண்கள் பிரச்னைகள் குறித்த பரிந்துரைகளை அந்தந்த சட்டசபைகள் மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு வழங்க இதுபோன்ற குழுக்களை அமைப்பது அவசியம்.
பெண்கள் பங்களிப்பு
2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க பெண்களின் தலைமைத்துவமும், பங்களிப்பும் முக்கியமானது. பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது பொருளாதாரத் தேவை ஆகும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதை சமூக நலனுக்கான விஷயமாக மட்டும் பார்க்காமல், தேசிய வளர்ச்சியின் அடித்தளமாக பார்க்க வேண்டும்.
கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக வளவளர்ச்சியின் முன்னேற்றத்தில் பெண் சுதந்திரப் போராளிகள் தாக்கத்தை ஏற்படுத்தினர். விண்வெளி ஆய்வு மற்றும் தொழில்நுட்பம் முதல் விளையாட்டு மற்றும் இலக்கியம் வரை அனைத்து துறைகளிலும் இந்திய பெண்கள் சிறந்து விளங்குகிறார்கள். இவ்வாறு ஓம் பிர்லா பேசினார்.