மும்பை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.40 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா: 3 பேர் கைது
மும்பை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.40 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா: 3 பேர் கைது
ADDED : செப் 15, 2025 06:41 PM

மும்பை; தாய்லாந்தில் இருந்து ரூ.40 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை கடத்தியவர்கள் மும்பை விமான நிலையத்தில் சிக்கினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் உயர்ரக கஞ்சா கடத்தப்படுவதாக மும்பை விமான நிலைய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, விமானங்களில் வரும் பயணிகளை வருவாய் நுண்ணறிவு பிரிவினர் கண்காணித்து வந்தனர்.
தாய்லாந்தில் இருந்து மும்பை வந்த விமானத்தில் இருந்த 3 இந்திய பயணிகளை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக தெரிகிறது. அவர்கள் வைத்திருந்த உடமைகளை சோதித்த போது, உள்ளே பச்சை வண்ணத்தில் சில பொருட்களை அவர்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அவற்றை எடுத்து சோதித்த போது, உயர்ரக கஞ்சா என்பது தெரியவந்தது. 20 கிலோ எடை கொண்ட இந்த உயர்ரக கஞ்சாவின் மதிப்பு ரூ.40 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களை கைது செய்து விசாரித்த போது பம்போடன், கான் என்பது அவர்களின் பெயர்கள் என தெரிய வந்தது. கடத்தி வந்த கஞ்சாவை வாங்கிச் செல்ல மதாரி என்பவர் காத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, அதிகாரிகள் ஒரு குழுவை அனுப்பி, மதாரியை கைது செய்தனர்.
உயர்ரக கஞ்சா என்று அழைக்கப்படும் இந்த ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது வெளிநாடுகளில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் மண் இன்றி, வீடுகளுக்குள்ளேயே நீர் கரைசல்களைக் கொண்டு வளர்க்கப்படும் ஒரு வகை கஞ்சா செடியாகும்.