விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால் ரத்து செய்வோம்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
விதிமுறைகள் மீறப்பட்டு இருந்தால் ரத்து செய்வோம்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
UPDATED : செப் 16, 2025 02:55 AM
ADDED : செப் 15, 2025 03:17 PM

புதுடில்லி: '' தேர்தல் கமிஷன் நடவடிக்கையில் தவறு ஏதும் இருந்தால் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் முழுமையாக ரத்து செய்யப்படும்,'' என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
பீஹாரில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த ஜூன் இறுதியில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது. இதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
பீஹார் முழுதும் தேர்தல் கமிஷன் ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் அடையாளங்களை சரிபார்த்தனர். அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஏழு லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்ததும், உயிரிழந்தவர்களின் பெயர்கள்,நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர்,வேறு பட்டியலில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்படி, 65 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டனர்.
இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மால்யா பக்சி அமர்வு விசாரித்து வருகிறது.
இன்றைய விசாரணையின் போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: தேர்தல் கமிஷன் மேற்கொண்ட நடவடிக்கையில் தவறு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தால், ஒட்டு மொத்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தையும் ரத்து செய்வோம். அரசியலமைப்பின்படி செயல்பட வேண்டியது தேர்தல் கமிஷனின் கடமை என்பதால், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் சட்டம் மற்றும் விதிமுறைகளை மதித்து தேர்தல் கமிஷன் நடக்க வேண்டும்.
நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் அமலாகும் வகையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வரும் 7 ம் தேதி இறுதி வாதம் நடைபெறும் என தெரிவித்தனர்.