பார்லியில் இயற்றப்படும் சட்டத்தை நிராகரிக்க முடியாது: சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜூ வரவேற்பு
பார்லியில் இயற்றப்படும் சட்டத்தை நிராகரிக்க முடியாது: சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜூ வரவேற்பு
ADDED : செப் 15, 2025 01:43 PM

புதுடில்லி: ''எந்தவொரு சட்டமும் பார்லிமென்டில் இயற்றப்படும்போது, அதை நிராகரிக்க முடியாது. இதைத்தான் இன்று சுப்ரீம்கோர்ட் அங்கீகரித்துள்ளது'' என பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
இது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: வக்ப் திருத்தச் சட்டம் குறித்த முழுமையான விசாரணைக்குப் பிறகு இன்று சுப்ரீம்கோர்ட் அளித்த தீர்ப்பை நான் வரவேற்கிறேன். சுப்ரீம்கோர்ட்டிற்கு முழு விஷயமும் தெரியும். மத்திய அரசு வழக்கறிஞர் சட்டத்தின் விதிகள் மற்றும் நோக்கங்களை சுப்ரீம்கோர்ட்டில் விரிவாக முன்வைத்துள்ளார். அதன்படி ஜனநாகத்திற்கு மிகவும் நல்ல முடிவை சுப்ரீம் கோர்ட் எடுத்துள்ளது.
எந்தவொரு சட்டமும் பார்லிமென்டில் இயற்றப்படும்போது, அதை நிராகரிக்க முடியாது. இதைத்தான் இன்று சுப்ரீம்கோர்ட் அங்கீகரித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் நான் திருப்தி அடைகிறேன். பீஹார் தேர்தலுக்கு பிரசாரம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் சமீப காலங்களில் காங்கிரஸும், ஆர்ஜேடியும் செய்து வரும் மிகவும் கீழ்த்தரமான அரசியலால் நாங்கள் அனைவரும் வருத்தப்படுகிறோம்.
குறிப்பாக, அவர்கள் பல ஆண்டுகளாக பிரதமரை தனிப்பட்ட முறையில் தாக்கி, துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். ஆனால் பிரதமரின் தாயார் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியின் விமர்சனத்தால் நாட்டு மக்கள் அனைவரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறினார்.