இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும்: விமானப்படை தளபதி பேச்சு
இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும்: விமானப்படை தளபதி பேச்சு
ADDED : செப் 19, 2025 07:50 PM

புதுடில்லி : ' ஒரு மோதலை விரைவில் எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்பது குறித்து உலக நாடுகள் இந்தியாவிடம் பாடம் கற்க வேண்டும்,'' என விமானப்படை தளபதி ஏபி சிங் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: ஆப்பரேஷன் சிந்தூரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் சமீபத்தில் கொள்முதல் செய்யப்பட்டவை. அவற்றில் பெரும்பாலானவை உள்நாட்டை சேர்ந்தது. ஒன்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு இருக்கலாம். அல்லது உள்நாட்டில் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கலாம். இந்த டிரெண்ட் வரும் காலங்களிலும் தொடர வேண்டும்.
விமானப்படை தாக்குதல் நடத்த வேண்டிய இலக்குகள் குறித்த தகவல் எங்களுக்கு வழங்கப் பட்டன. அவற்றை துல்லியமாக தாக்கினோம். எதிரிகள் போரை நிறுத்த மறுத்து நம் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினோம். அவர்களின் பல தளங்கள் அழிக்கப்பட்டன. ரேடார், கட்டுப்பாட்டு மையம், போர் விமானங்கள் ஆகியன சேதம் அடைந்தன.
பாகிஸ்தான், பல விமானப்படை தளங்களை மூடினாலும், வான்வெளியை மூடவில்லை. லாகூரில் பயணிகள் விமானம் தரையிறங்கவும், கிளம்பிச் செல்லவும் அனுமதி வழங்கியது. இது நமக்கு பெரிய சவாலாக இருந்தது. இதற்கு மத்தியில் பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களையும், டிரோன்களையும் ஏவியது. இது குறித்த தகவல் நமக்கு கிடைத்தது. இருப்பினும், எவ்வளவு சவால் வந்தாலும் அப்பாவி மக்கள் மற்றும் ராணுவத்தை சாராதவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். போரில் வெற்றி பெறுவதற்கு டிரோன்கள் மட்டும் போதாது. நீண்ட தூரம் மற்றும் கனரக ஆயுதங்கள் தேவை. நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் விமானங்களும் உள்ளன.
அரசியல் தலைமை எங்களுக்கு தெளிவான உத்தரவுகளை வழங்கியது. எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. திட்டங்களை நிறைவேற்ற முழு சுதந்திரம் அளிக்கப் பட்டது. உண்மையில் ஒருங்கிணைப்பு இருந்தது. முப்படை தளபதிகள் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்து திட்டங்களை வகுத்தனர். இதில் முப்படை தலைமை தளபதி மற்றும் மற்ற அமைப்புகளும் சேர்ந்து கொண்டன. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முக்கிய பங்காற்றினார். இது தான் வெளிவந்த நேர்மறையான பாடம்.
பாகிஸ்தானின் பாலகோட்டில் 2019ம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்ட போது விமானப்படை பல கேள்விகளுக்கு உள்ளானது. ஆனால், ஆப்பரேஷன் சிந்தூரில் சரியான அரசியல் உறுதி, சரியான அரசியல் தலைமை மற்றும் படைகளுக்கு கட்டுப்பாடு ஏதும் விதிக்கப்படவில்லை.
இன்று ரஷ்யா - உக்ரைன் இடையேயும், இஸ்ரேல் போரும் நடந்து வருகிறது. ஆண்டுகள் கடந்தாலும் அது நீடிக்கிறது. இதனை முடிக்க வேண்டும் என யாரும் நினைக்காததே அதற்கு காரணம். ஆனால், நாம் விரைவில் போரை நிறுத்திவிட்டோம். இன்னும் கொஞ்ச நாள் நீடித்து இருக்க வேண்டும் என சிலர் கூறினர். ஆனால், நமது நோக்கம் என்ன? நமது நோக்கம் பயங்கரவாதத்துக்கு எதிரானது. அவர்களை தாக்கினோம். நமது நோக்கம் நிறைவேறிய பிறகு தாக்குதலை ஏன் நிறுத்தக்கூடாது?. அதனை ஏன் தொடர வேண்டும்?.
எந்த மோதலுக்கும் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இதனால், நாம் அடுத்த கட்டத்திற்கு தயாராவது தடைபடுவதுடன், பொருளாதாரத்தையும், வளர்ச்சியையும் பாதிக்கும். இதனையே உலக நாடுகள் மறந்துவிட்டன என நினைக்கின்றேன். போரை துவக்கிய போது நமது இலக்கு என்ன என்பதை அந்த நாடுகளுக்கு தெரியவில்லை. தற்போது அவர்களின் இலக்கு மாற துவங்கிவிட்டது. அவர்களுக்கு இடையே ஈகோ தலைதூக்குகிறது. ஒரு மோதலை விரைவில் எப்படி முடிக்க வேண்டும் என இந்தியாவிடம் உலக நாடுகள் பாடம் கற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.