இந்தியா வந்தார் சிங்கப்பூர் பிரதமர் வாங்; 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது
இந்தியா வந்தார் சிங்கப்பூர் பிரதமர் வாங்; 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது
ADDED : செப் 03, 2025 02:21 AM

புதுடில்லி: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பரில் சிங்கப்பூர் சென்றபோது, இரு நாடுகளுக்கும் இடையே விரிவான நல்லுறவு ஏற்பட்டது.
60வது ஆண்டுவிழா இதன் தொடர்ச்சியாக சிங்கப்பூர் பிரதமர் வாங், தன் மனைவி மற்றும் அமைச்சர்கள் குழுவுடன் முதல் முறையாக நேற்று டில்லி வந்தார்.
இந்தியா - சிங்கப்பூர் இடையிலான துாதரக உறவு மலர்ந்து, 60வது ஆண்டுவிழா கொண்டாடப்படும் சூழலில், வாங்கின் இந்திய பயணம் முக்கியத் துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தியா - சிங்கப்பூர் இடையே இருவழி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலேயே வாங் டில்லி வந்திருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், இரு நாட்டுக்கும் இடையே கப்பல், விமான போக்குவரத்து மற்றும் விண்வெளி உள்ளிட்ட துறைகளில் ஐந்து முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியுடன் இணைந்து மஹாராஷ்டிராவில் அமைக்கப்பட்டுள்ள கன்டெய்னர் முனையத்தை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக வாங் நாளை துவக்கி வைக்கிறார்.
நம்பிக்கை சிங்கப்பூர் துறைமுக ஆணையம் இந்த திட்டத்திற்காக 8,800 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இந்தியாவின் முதலீடுகளுக்கு சிங்கப்பூர் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த 2014 முதல், 15 லட்சத்து 40,000 கோடி ரூபாய் வரை இந்தியாவில் சிங்கப்பூர் முதலீடு செய்துள்ளது.
வாங்கின் இந்திய வருகையால், இரு நாட்டுக்கும் இடையே பல்வேறு துறைகளில் நல்லுறவு மேம்படும் என நம் வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேலும், இரு நாட்டு பிரதமர்களும் பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் பேச்சு நடத்துவர் என கூறியுள்ளது.
பிரதமருடனான சந்திப்புக்குப் பின் ஜனாதிபதி திரவுபதி முர்மு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களையும் சந்திக்க, சிங்கப்பூர் பிரதமர் வாங் திட்டமிட்டுள்ளார்.
வாங்குடன், தமிழக வம்சாவளியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் சண்முகம், வெளியுறவு துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரும் வந்துள்ளனர்.