அதானிக்கு எதிரான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை: செபி
அதானிக்கு எதிரான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டில் ஆதாரம் இல்லை: செபி
UPDATED : செப் 18, 2025 09:40 PM
ADDED : செப் 18, 2025 09:10 PM

புதுடில்லி: '' அதானிக்கு எதிராக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்த குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை,'' என பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம்( செபி) தெரிவித்துள்ளது. இதனையடுத்து பொய்க்கதைகளை பரப்பியவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதானி கூறியுள்ளார்.
இந்தியாவின் குஜராத் மாநில தலைநகர் ஆமதாபாத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் நிறுவனம், அதானி குழுமம். இந்நிறுவனம், துறைமுகம், எரிசக்தி மற்றும் உணவுப்பொருள் உட்பட பல்வேறு தொழில்துறைகளில் இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல அயல்நாடுகளிலும் வர்த்தகம் செய்து, பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவராக கவுதம் அதானி (61) உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த நிதி முதலீட்டு ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்.எல்.சி., எனும் நிறுவனம், இந்தியாவின் அதானி குழுமம் கணக்குகளில் முறைகேடுகளை செய்து பொய்யாக வெளியிட்டு வருவதாகவும், நிறுவன கடன்களை பெருமளவு மறைத்து இருப்பதாகவும், இதனால் பங்கு சந்தையில் தனது முதலீட்டாளர்களுக்கு உண்மையான தகவல்களை மறைத்த குற்றத்தை புரிந்ததாகவும் பெரும் குற்றச்சாட்டை வைத்தது. நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) விசாரணை நடத்தி வந்தது.
ஆதாரம் இல்லை
இந்நிலையில், விசாரணை முடிவில், அதானி மற்றும் அவரது நிறுவனத்துக்கு எதிரான ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்து உள்ளது. முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தக்கூடிய பத்திரங்கள் அல்லது கட்டுப்பாடுகளை கையகப்படுத்துவதில் எந்த விதிமீறலும் இல்லை. இதனால், அதானி நிறுவனம் அல்லது அதன் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதோ அல்லது அபராதம் விதிப்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
அதானி அறிக்கை
இதனையடுத்து அதானி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விரிவான விசாரணைக்கு பிறகு, ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்ற எங்களின் கருத்தை செபி உறுதி செய்துள்ளது. வெளிப்படைத்தன்மைக்கு எப்போதும் அதானி நிறுவனம் முக்கியத்துவம் அளிக்கும். இந்த மோசடியான மற்றும் புனையப்பட்ட அறிக்கையால் இழப்பை சந்தித்த முதலீட்டாளர் வேதனை அடைந்தது வருத்தம் அளிக்கிறது. தவறான கதைகளை பரப்பியவர்கள் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்திய அமைப்புகளுக்கும், மக்களுக்கும், தேசத்தக்கும் நாங்கள் கொண்ட உறுதிப்பாடு ஆகியவை மீதான எங்களின் உறுதிப்பாட்டை அசைக்க முடியாது. ஜெய்ஹிந்த். சத்யமேவ ஜெயதே. இவ்வாறு அந்த அறிக்கையில் அதானி கூறியுள்ளார்.