தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்துங்கள்; பிரிட்டன் பிரதமருக்கு ஐடியா கொடுத்த அதிபர் டிரம்ப்
தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்துங்கள்; பிரிட்டன் பிரதமருக்கு ஐடியா கொடுத்த அதிபர் டிரம்ப்
ADDED : செப் 18, 2025 09:14 PM

லண்டன்: பிற நாட்டினர் பிரிட்டனில் குடியேறுவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுங்கள். தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்துங்கள் என பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மரிடம் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
சமீபத்தில், ஐரோப்பிய நாடான பிரிட்டனில், வெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறுபவர்களுக்கு எதிராக, அந்நாட்டின் தீவிர வலதுசாரி ஆர்வலரான டாமி ராபின்சன் தலைமையில், 'யுனைட் தி கிங்டம்' எனும் பெயரில் லண்டனில் பேரணி நடந்தது. இப்பேரணியில், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பிரிட்டன் சென்றுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டு பிரதமர் கெயர் ஸ்டார்மரை சந்தித்து பேசினார். அப்போது டிரம்ப் கூறியதாவது: குடியேற்ற நிலைமையை நிறுத்த நடவடிக்கை எடுங்கள். தேவைப்பட்டால் ராணுவத்தை பயன்படுத்துங்கள்.கட்டுப்படுத்தப்படாத குடியேற்றம் நாடுகளை உள்ளிருந்து அழித்துவிடும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
'காசாவில் இரு நாடுகள் தீர்வு, அமைதி அல்லது போர் நிறுத்தம் ஆகியவற்றை ஹமாஸ் விரும்பவில்லை. பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நேரத்திற்கும் வருகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. உக்ரைன் அமைதி ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள ரஷ்ய அதிபர் மீது அழுத்தம் கொடுக்க இணைந்து செயல்பட்டு வருகிறோம்' என பிரிட்டன் பிரதமர் கெயர் ஸ்டார்மர் தெரிவித்தார்.
இதற்கு, 'புடின் என்னை ஏமாற்றிவிட்டார்' எனக் கூறி அதிருப்தியை வெளிப்படுத்த டிரம்ப், எங்களால் முடிந்த சிறந்த வழியில் ஒரு சிறந்த தீர்வைக் கொண்டு வர விரும்புவதாக தெரிவித்தார்.