17 ஆண்டாக நடந்த வழக்கில் உ.பி., மாஜி அமைச்சர் விடுதலை
17 ஆண்டாக நடந்த வழக்கில் உ.பி., மாஜி அமைச்சர் விடுதலை
ADDED : செப் 18, 2025 06:35 AM

மொராதாபாத்: உத்தர பிரதேசத்தில் பொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில், 17 ஆண்டுகளுக்கு பின் சமாஜ்வாதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அசம் கான் விடுதலை செய்யப்பட்டார்.
சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அசம் கான், அமைச்சராக இருந்தபோது, 2008ல் மொராபாத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது, சாஜ்லெட் பகுதியில் இவரது கான்வாயில் இருந்த ஒரு காரின் சைரனை போலீசார் அகற்றினர். இதனால் ஆத்திரமடைந்த அசம் கான், தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்.
அப்போது அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு அங்கிருந்த மின்கம்பங்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தனர்.
இது தொடர்பாக அசம்கான் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி, கோர்ட் உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை.
இந்த சம்பவத்தில் போலீசார் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஆனால் உரிய சாட்சிகளை ஆஜர்படுத்தாததால், வழக்கில் இருந்து அசம் கானை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் 17 ஆண்டு கால வழக்கு முடிவுக்கு வந்தது. அசம் கான் ஏற்கனவே மற்ற வழக்குகளில் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.