சினிமா என் ஆன்மாவின் இதயத்துடிப்பு: தாதாசாகேப் பால்கே விருது வென்றது குறித்து மோகன்லால் பெருமிதம்
சினிமா என் ஆன்மாவின் இதயத்துடிப்பு: தாதாசாகேப் பால்கே விருது வென்றது குறித்து மோகன்லால் பெருமிதம்
ADDED : செப் 23, 2025 08:43 PM

புதுடில்லி: சினிமா என் ஆன்மாவின் இதயத்துடிப்பு என தாதாசாகேப் பால்கே விருது வென்றது குறித்து நடிகர் மோகன்லால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். பின்னர் விஞ்ஞான் பவனில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் லால் உருக்கமான உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்திய சினிமாவின் தந்தையின் பெயரில் இந்திய அரசால் நிறுவப்பட்ட ஒரு கவுரவமான தாதாசாகேப் பால்கே விருதைப் பெற்ற இன்று, உங்கள் முன் நான் மிகுந்த பெருமையுடனும் நன்றியுடனும் நிற்கிறேன். சினிமா என் ஆன்மாவின் இதயத் துடிப்பு. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நான் இந்த தருணத்தை கனவில் கூட நினைத்ததில்லை.
தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்வாகியுள்ளதாக மத்திய அரசு இடமிருந்து அழைப்பு வந்ததும், தங்கள் மலையாள சினிமா பாரம்பரியத்தின் குரலாக என்னைத் தேர்வு செய்துள்ளதாக எண்ணிப் பெருமிதம் கொண்டேன்.
மலையாளத் திரைப்படத் துறையின் பிரதிநிதியாக, இந்த தேசிய அங்கீகாரத்தை பெற்றுக்கொள்கிறேன். மாநிலத்திலிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெறும் இளைய மற்றும் இரண்டாவது நபராக பணிவுடன் இந்த விருதை ஏற்கிறேன். இந்த தருணம் என்னுடையது மட்டுமல்ல. ஒட்டுமொத்த மலையாள சினிமாவுக்கும் சொந்தமானது. இவ்வாறு மோகன்லால் பேசினார்.
ஷாருக்கான் வாழ்த்து
டில்லியில் இன்று நடந்த விழாவில், தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் மோகன் லாலை கட்டி அணைத்து ஷாருக்கான் வாழ்த்து தெரிவித்தார். அவருடன் நடிகை ராணி முகர்ஜி மற்றும் விக்ரந்த் மாசே உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.