உ.பி.யில் கார்-லாரி மோதி விபத்து: 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி பலி
உ.பி.யில் கார்-லாரி மோதி விபத்து: 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீயில் கருகி பலி
ADDED : செப் 23, 2025 11:37 AM

அலிகார்: உ.பி.யில் காரும், சரக்கு லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் தீயில் கருகி பலியாகினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
அலிகார் நகரில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள நானு மேம்பாலத்தில் இன்று(செப்.23) காலை சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சென்று கொண்டிருந்தனர்.
கோயில் ஒன்றில் வழிபாட்டை முடித்துவிட்டு அவர்கள் காரில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தது. நானு மேம்பாலத்தில் காலை 6 மணியளவில் கார் வந்த போது எதிரே வந்த சரக்கு லாரியுடன் திடீரென மோதியது.
மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீப்பற்றிக் கொண்டன. மளமளவென பற்றிய தீ, கார் முழுவதும் பரவியது. விபத்தைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள் உடனடியாக காரில் இருந்தவர்களை மீட்க முயற்சித்தனர். அவர்களின் முயற்சி பலனளிக்கவில்லை.
ஒருவரை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. காரில் இருந்த 5 மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகள், அவர்களின் பெற்றோர் என 4 பேரும் உடல்கருகி பலியாகினர்.
தகவலறிந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் எஸ்.பி. அம்ரித் ஜெயின் கூறுகையில், இரு வாகனங்களும் அதி வேகத்தில் வந்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று எண்ணுகிறோம்.
மோதிய வேகத்தில் பெட்ரோல் டேங்க் தீப்பிடித்ததால் வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தன. விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் அடையாளம் தெரியவில்லை. விபத்து காரணமாக ஆக்ரா-அலிகார் சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு எஸ்.பி. அமித் ஜெயின் கூறினார்.
பொதுவாக, நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.