சத்தீஸ்கரில் 21 பெண் நக்சலைட்டுகள் உட்பட 71 பேர் சரண்; ஆயுதங்கள் ஒப்படைப்பு
சத்தீஸ்கரில் 21 பெண் நக்சலைட்டுகள் உட்பட 71 பேர் சரண்; ஆயுதங்கள் ஒப்படைப்பு
ADDED : செப் 24, 2025 08:42 PM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 21 பெண்கள் உட்பட நக்சலைட்டுக்கள் 71 பேர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். இதில் ரூ.64 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டுகள் 30 பேர் அடங்குவர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். பாதுகாப்பு படையினர் நக்சலைட்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தி வருகின்றனர். இதனால் அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று தண்டேவாடா மாவட்டத்தில் 21 பெண்கள் உட்பட நக்சலைட்டுக்கள் 71 பேர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். தங்களது ஆயுதங்களை போலீசில் ஒப்படைத்தனர். இதில் ரூ.64 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டுகள் 30 பேர் அடங்குவர். சரணடைந்தவர்களில் 17 வயது சிறுவனும், 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகளும் அடங்குவர். இதுவரையிலான சரண் அடை ந்தவர்களில் மிகப்பெரிய எண்ணிக்கையில் இதுவும் ஒன்று.
சரணடைந்த நக்சலைட்டுகள் அனைவருக்கும் தலா ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கையின்படி மேலும் மறுவாழ்வு அளிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதுவரை நக்சலைட்டுகள் 1,113 பேர் வன்முறையை கைவிட்டுள்ளனர். இவர்கள் தங்களது ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். இவர்களில் 297 பேருக்கு சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.