அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்: தலைமை நீதிபதி கவாய்
அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்: தலைமை நீதிபதி கவாய்
ADDED : செப் 18, 2025 05:51 PM

புதுடில்லி: விஷ்ணு சிலை விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து பேசிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, ''நான் கூறியது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்,'' என்றார்.
மத்திய பிரதேச மாநிலத்தில், யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட கஜூராகோ வளாகத்தில் இருந்த ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த 7 அடி உயரம் கொண்ட விஷ்ணு சிலையை புனரமைத்து மீண்டும் நிறுவ வேண்டும் எனக்கூறி ராகேஷ் தலால் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி கவாய்,' இது முற்றிலும் விளம்பரத்துக்காக போடப்பட்ட வழக்கு. அந்த தெய்வத்திடமே ஏதாவது செய்யச் சொல்லுங்கள். கடவுள் விஷ்ணுவின் தீவிர பக்தர் எனக்கூறுகிறீர்கள். சில தலையீடுகளுக்காக விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள். இது முற்றிலும் தொல்லியல் துறை வரம்பில் வருகிறது. அனுமதி தரலாமா அல்லது வேண்டாமா என முடிவெடுக்க வேண்டியது அந்தத்துறை'' எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்தத் தீர்ப்பு வெளியானதும் சமூக வலைதளத்தில் நீதிபதி கவாய் பெயர் வைரலானது. அவர் குறித்து குறை கூறி கருத்துகள் பகிரப்பட்டன. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்து வழக்கறிஞர்கள் கடிதம் எழுதினர்.
இந்நிலையில், வழக்கு ஒன்றின் விசாரணையின் போது தலைமை நீதிபதி கவாய் கூறுகையில், ''நான் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் தவறான முறையில் சித்தரிக்கப்படுவதாக ஒருவர் கூறினார். நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். நேபாளத்திலும் இது போன்று தான் நடந்தது,'' என்றார்.
அப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறுகையில், ' தலைமை நீதிபதி கவாயை 10 ஆண்டுகளாக எனக்கு தெரியும். அவர் அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் செல்கிறார். நியூட்டன் விதிகள் பற்றி நமக்கு தெரியும். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. தற்போது ஒவ்வொரு வினைக்கும் சமூக வலைதளங்களில் எதிர்வினை ஆற்றுகின்றனர்,'' என்றார்.
மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில்,' நாம் ஒவ்வொரு நாளும் கஷ்டப்படுகிறோம். சமூக வலைதளங்கள் கட்டுக்கடங்காத குதிரை. அதை அடக்க வழியும் இல்லை,' என்றார்.